தமிழக பாஜகவின் மாநில தலைவர் லண்டனுக்கு பறந்துள்ளார். மூன்று மாதம் கழித்து டிசம்பர் மாதம் தான் சென்னைக்கு திரும்புகிறார். வெளிநாட்டில் கல்வியியல் படிப்பைத் தொடர்ந்து கொண்டே, அங்கிருந்தபடியே தமிழக பாஜகவின் அரசியல் பணிகளையும் கவனிக்கிறேன் என கட்சியின் மேலிடத்திடம் தெரிவித்திருந்தார் மாநில தலைவர்.
ஆனால், இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பாஜகவின் கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளார் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் கன்வீனராக ஹெச்.ராஜாவும், குழுவின் உறுப்பினர்களாக சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு, தமிழக பாஜகவின் கோர் கமிட்டியுடன் இணைந்து கட்சிப் பணிகளை முன்னெடுப்பார்கள்.
தற்போது தமிழக பாஜகவின் கட்சி பணிகள் என்பது, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதுதான். அந்த வகையில், செப்டம்பர் 1-ந்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கைத் தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உறுப்பினர் சேர்க்கைக்காக ஆலோசனைக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூன்மூர்த்தி என்பவர், வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடத்துகிறார். ஸ்டார் ஹோட்டலில் நடத்தினால் மாவட்டத் தலைவர்கள் உள்பட, கட்சி நிர்வாகிகள் எப்படி வருவார்கள் ? ஆலோசனை கூட்டம் நடப்பது பொது மக்களுக்கும், தொண்டர்களுக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் எப்படி தெரிய வரும் ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுவாக, இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட அளவில் உள்ள கட்சி அலுவலகத்திலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ நடக்கும். அப்போதுதான் நிர்வாகிகளும், தொண்டர்களும் எளிதாக வந்து போவார்கள். ஆனால், ஸ்டார் ஹோட்டலில் நடத்துவது தமிழக பாஜகவிலும் மாவட்ட பாஜகவிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.