அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இரண்டு தரப்பும் அதிமுக தங்கள் கட்சி என உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ், தனது தரப்பு ஆதரவாளர்களுடன் கட்சிப் பொதுக்கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்தது.
இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக ஓபிஎஸ் நேற்று அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இன்று காலை துவங்கிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஓபிஎஸ் வந்தபோது அங்கு அவரின் ஆதரவாளர்கள் நாங்களும் உள்ளே வருவோம் என்று நிர்வாகிகளுடன் வாதிட்டனர். இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன் பின் துவங்கிய இந்தக் கூட்டத்திற்கு அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கும் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியைக் காப்பாற்ற அனைவரும் கூடியுள்ளீர்கள். உங்களுக்கு எம்.ஜி.ஆரின் ஆசி உண்டு என்பதை அதிகாரப்பூர்வமாகக் கூறுகிறேன். நமது சமுதாயக் கட்டமைப்பில் உழைப்போர் தாழ்ந்தோராக இருப்பார். ஆனால், எம்.ஜி.ஆர் அவர்கள் கையெழுத்துப் போட்டால் உழைப்போரே உயர்ந்தவர் என எழுதித்தான் கையெழுத்திடுவார். உழைப்போரைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது. கவிதைகளில் உள்ள இடைச்செருகல்களைக் கற்றறிந்த புலவர்கள் அகற்றுவார்கள். அதேபோல் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும்.” எனக் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 88 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.