முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம் நேற்று (21.05.2023) அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர். இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு எம்.பி மாணிக்கம் தாகூர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் உடன் இருந்தனர். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2 ஆயிரம் ரூபாய் கொண்டு வரப்படுவதாக மோடி தெரிவித்தார். அப்போது ராகுல் காந்தி ஆயிரத்தை அழித்து 2 ஆயிரம் கொண்டு வந்தால் எப்படி கருப்பு பணம் ஒழியும் என்று கேள்வி எழுப்பினார். தற்போது பாஜக 2 ஆயிரத்தை ஒழிப்பதாக கூறுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்வியை மறைக்கத்தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் முடிவை அறிவித்திருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது சரியான கணிப்பு தான். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி மதுவை ஒழிக்க வேண்டும் என போராடப் போவதில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கிளைகளை கிராமந்தோறும் உருவாக்கிய பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும். அவரது இந்த சாதனையால் தான் அதிக எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இது ஊர் அறிந்த உண்மை. எடப்பாடி ஆட்சியில் கிராமந்தோறும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடும் வேலையை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.