தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (05.03.2021) கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், சேப்பாக்கம் தொகுதி குஷ்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டணி தொகுதிப் பங்கீடு உறுதியாகும் முன்பாகவே இந்த தொகுதியில் பாஜகவின் குஷ்புதான் வேட்பாளர் என அக்கட்சியினர் பேசிவந்தனர். இன்று பாஜக தனது உத்தேசப் பட்டியலிலும் அதனைக் குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும் எந்தெந்தக் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதி என முடிவாகி அதன்பின் வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலே இறுதியானது.
இன்று பா.ஜ.க. சார்பில் திருவல்லிக்கேணியில், நடிகை குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மொப்பட்டை ஓட்டுவதற்கு முயற்சிசெய்தார். அது தவறியது, உடனடியாக அங்கிருந்த கட்சியினர் அவரை தாங்கிப்பிடித்து நிறுத்தினர். சமீபத்தில் மேற்குவங்கத்தில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அம்மாநில முதல்வர் தனது இல்லத்திலிருந்து சட்டசபை வரை பேரணியாகச் சென்றார் அப்போது அவரும் இதேபோல் ஒரு மொப்பட்டை ஓட்ட முயன்றார். அப்போதும், வாகனம் சாய்ந்தது. உடனே, அவரது பாதுகாவலர்கள் அந்த வாகனத்தைத் தாங்கிப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.