100 வார்டுகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 86வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஒரே கவுன்சிலர் பூமா என்பவர் மட்டுமே.
இந்நிலையில் இவர் பாஜகவின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரனுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், "தாங்கள் என்னை மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவேன். மகிழ்ச்சியே ஆனால் தங்களின் செயல்பாடுகளும் சுயநலப் போக்கும் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதையும் அறிவேன்.
பிரதமர் நரேந்திர மோடி, மாநில தலைவர் அண்ணாமலை செய்யும் சீரிய செயல்பாட்டாலும், உண்மையான போக்காலும் தமிழகத்தில் தலைநிமிர்ந்து வரும் பாஜகவை, தங்களைப் போல பணியாற்றும் ஒரு சில சுயநலவாதிகளின் செயல்களால் பாஜக வீழ்ச்சி பாதையில் செல்கிறது என்பதையும் நான் அறிவேன். அதற்கு உதாரணம் மதுரை மாநகரே. சுயநலத்தோடு கட்சி விசுவாசமின்றி செயல்படும் தங்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது கட்சிக்கு நான் செய்யும் இழி செயலே ஆகும். ஆகவே தாங்கள் அறிவித்த மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
தங்களுடன் இணைந்து இனி செயலாற்ற மனமில்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கட்சியின் அங்கீகாரத்தோடும், மாநில தலைவரின் ஆதரவோடும், நான் வெற்றி பெற்ற 86-வது மாமன்ற உறுப்பினர் பதவியை சரியான முறையில் பயன்படுத்தி, மக்கள் சேவையாற்றி, கட்சிக்கு முழு விசுவாசத்துடனும், கட்சிக்கு அவப்பெயரின்றி, நற்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவேன் என்பதையும், தங்களிடம் மாவட்ட தலைவர் என்ற முறையில் தெரிவித்து உறுதி கூறுகிறேன் " எனத் தெரிவித்துள்ளார். கவுன்சிலர் பூமாவின் இந்த கடிதமானது மதுரை மாநகர பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.