திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கட்சி தலைமை அறிவித்தபடி ஈரோட்டில் இன்று ஈரோடு தெற்கு மா.செ. சு.முத்துச்சாமி தலைமையில் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் மாநகர மேயருக்கு மாவட்ட கட்சி செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் செல்லப் பொன்னி மனோகரன் உட்பட பலரும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஏராளமான பேர் மனுக்களை வாங்கினார்கள்.
அதே போல் பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளோரும் விண்ணப்பங்கள் பெற்றனர். மனுக்களை பூர்த்தி செய்து விருப்பமனு கட்டணத்துடன் கொடுக்க 20 ந் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் தங்களுக்கு உகந்த நாளில் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை கொடுப்போம் என்றனர்.
உடன்பிறப்புக்கள் மேலும் அவர்கள் கூறும்போது "எங்க கட்சி தலைமை அ.தி.மு.கவை விட விருப்ப மனு கட்டணத்தை அதிகமாக அறிவித்துள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் - ரூ.50,000, மாமன்ற உறுப்பினர் - ரூ.10,000, நகர்மன்றத் தலைவர் - ரூ.25,000, நகர்மன்ற உறுப்பினர் -ரூ.5000, பேரூராட்சித் தலைவர் - ரூ.10,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் - ரூ.2500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.10,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ.5000. மேலும், இந்த தொகையை பாதியாக குறைத்திருந்தால் இன்னும் இரண்டு மடங்கு ஆட்கள் மனுக்களை வாங்குவர் " என்றனர்.