Skip to main content

திமுக, அதிமுக அசைக்க முடியாத இரும்புக் கோட்டை அல்ல: கமலுக்கு பகிரங்க கடிதம்

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

திமுகவோ அல்லது அதிமுகவோ அசைக்க முடியாத இரும்புக் கோட்டையும் அல்ல. ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து உடனடியாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் களம் காண வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். 

 

mnm



தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க. கமல்ஹாசன் அவர்களுக்கு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பகிரங்க கடிதம் என்ற தலைப்பில் வெளியான அதில், 

 

"மக்கள் நீதி மய்யம்" கட்சித் தலைவர் மரியாதைக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம்.
 

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது எனவும், அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகள் எழுதி, இயக்கும் நாடகத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாங்கள் அறிவித்துள்ளது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கிறது.
 

ஏனெனில் அந்த இருபெரும் கட்சிகளுக்கும், இது வரை அவர்களோடு மாறி, மாறி கூட்டணி வைத்து அவர்களின் முதுகில் சவாரி செய்து வந்த கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் சுமார் 4% வாக்குகளை அளித்தனர் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.
 

கட்சி துவங்கி சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பொதுத் தேர்தலை சந்தித்து 4%வாக்குகளை பெற்றதை பலராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் அதற்கடுத்து வந்த இடைத்தேர்தலில் தமிழக ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி வாரி இறைத்த "பணமழைக்கிடையே நேர்மை நிலைநாட்டப்படாது" என்கிற அடிப்படையில் அந்த இடைத்தேர்தலை மக்கள் நீதி மய்யம் புறக்கணித்ததில் நியாயம் இருந்தது.


 

 

மேலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக மறக்கடிக்கப்பட்டிருந்த "கிராம சபை"யை தூசி தட்டி, தூக்கத்தில் இருந்த எதிர்க்கட்சிகளையெல்லாம் கிராமங்களை நோக்கி ஓட வைத்த பெருமை உங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விரும்பாத ஆளுங்கட்சியும், ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை நடத்திய தற்போதைய எதிர்க்கட்சியும் மாறி, மாறி நீதிமன்றம் சென்று, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இன்னும் சொல்லப்போனால் ஆளும், ஆண்ட கட்சிகளின் நாடகத்தின் இறுதிக் காட்சியாக நடைபெற இருக்கும் "தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்று மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும், மக்கள் நலப்பணியாற்றிட நீங்களும் வருவீர்கள்" என "மிகுந்த நம்பிக்கையோடு இருந்த தமிழக மக்களுக்கு தங்களின் அறிவிப்பு ஏமாற்றத்தையே பரிசாக தந்துள்ளது."


 

 

அது போல "சிறுபிள்ளைகளின் வெள்ளாமை வீடு வந்து சேராது" என்றும்,  "பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று" என மக்கள் நீதி மய்யம் குறித்து பொதுமக்கள் பேசுவது நமது காதில் சத்தமாகவே விழுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து அச்சப்பட அரசியல்வாதிகளின் விமர்சனத்திற்கு முக்கியத்துவம் தரவில்லை என்றாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது உங்களது கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 

மேலும் திமுகவோ அல்லது அதிமுகவோ அசைக்க முடியாத இரும்புக் கோட்டையும் அல்ல. அதே சமயம் அவர்களை எளிதாக எடை போடக்கூடாது என்பதையும் நன்கு உணர்ந்தவர் நீங்கள். சுயலநலமே நோக்கமாக கொண்டவர்கள் எல்லாம் அவர்கள் முதுகில் சவாரி செய்து அறுவடைகளை அள்ளிக் கொண்டிருக்க, நல்லவர்களும், புதியவர்களும் அவர்களை பார்த்து காரணங்களைச் சொல்லி கடந்து போவது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல.

 

Ponnusamy


 

எனவே தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து உடனடியாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் களம் காணச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது கட்சியை மக்களோடு மிகவும் நெருக்கமாக கொண்டு சென்று மிகப் பலமான உறவை ஏற்படுத்தும் அஸ்திவாரமாக அமைந்து அதுவே அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்