நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
தேமுதிகவும் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உற்சாகத்தை ஏற்படுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தேமுதிகவினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலும் தான் நமக்கான இலக்கு. பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியைச் சரி செய்து இமாலய வெற்றி பெறுவோம். பெரும் பொருட்செலவு செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேமுதிக வெற்றி பெறமுடியும் என நினைக்கும் வார்டுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட வேண்டும். திமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகள் தனித்து போட்டி என்பதால் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.