வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்போம். மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என தெரிந்து விடும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் மதுரை தெப்பக்குளத்தில் உள்ல தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “மக்களை கவருபவர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர். ஆனால் இப்பொழுது அத்தகைய வசீகரிக்கும் ஆற்றல் கொண்ட தலைவர்கள் எங்கும் இல்லை.
மொழிக்கொண்கையை பொறுத்தவரையில் எங்கள் நிலைப்பாடு அண்ணாவின் இரு மொழிக்கொள்கை தான். மொழித்திணிப்பு வந்தால் கண்டிப்பாக அதிமுக தன் எதிர்ப்பை பதிவு செய்யும். அந்த வகையில் முதல்வர் சொன்னதை வரவேற்கிறோம். மத்திய அரசு கொண்டுவந்தாலும் சரி யார் கொண்டு வந்தாலும் சரி ஒரு மொழியை திணிப்பார்களானால் அதிமுக நிச்சயம் ஏற்காது.
முதல்வர் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என சொல்லி இருக்கிறார். இதில் ஐ.பெரியசாமி வேறு கூட்டணி இல்லாமல் நாம் நாற்பதிலும் நிற்க வேண்டும் என சொல்லி இருக்கார். அதை வேண்டுமானால் நாங்கள் எங்களது பொதுச் செயலாளரிடம் திமுக தனியாக நின்றால் நாமும் தனியாக நிற்போம் என்று சொல்லி தனித்து நிற்கும் அரசியல் களத்தை பார்த்துவிடுவோம். தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்துவிடுவோம். எல்லாரும் தனித்து நிற்போம். கொள்கையினை சொல்லி ஓட்டு கேட்போம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.