அதிமுகவில் நிகழ்ந்து வந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் சார்பில் 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதிகள் சகாதேவன் மற்றும் சவிக் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.
இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் விதிகள் மாற்றத்தை ஏற்றதோடு, கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருந்தது.
இதையடுத்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வழங்கியது. அதில், ‘பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்களுக்குத் தடை விதிக்க முடியாது. தீர்மானங்களுக்குத் தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.’ என்று கூறி அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுக பொதுகுழு தொடர்பாக யாரேனும் மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.