
அமமுக நிர்வாகிகள் சிலர் இன்று முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதன் பின் அந்த நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நிர்வாகி ஒருவர், “எங்களை அமமுக இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு உண்மையான அதிமுகவில் இணைத்துக் கொண்டோம். இதுதான் உண்மையான அதிமுக. தினகரனுடன் இருந்தோம். இப்பொழுது அவரது கொள்கைகள் பிடிக்கவில்லை.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். முதலில் அவர்களது குடும்பம் ஒன்றிணையட்டும். ஜெயா ப்ளஸ் டிவியில் அமமுக செய்திகள் எதையாவது போடுகிறார்களா? அதற்கு நாங்கள் பலிகடா ஆகமாட்டோம். டிடிவி செய்தி ஒரு செய்தியைக் கூட போடமாட்டார்கள்.
அதிமுகவை மீட்டெடுப்போம் என்றார். அதே வேளையில் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்றார். ஆனால், இப்பொழுது அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறேன் என்கிறார். அதிமுகவை உடைத்தது பன்னீர்செல்வம். இன்று அவருடன் நட்பு பாராட்டி, எல்லாம் ஒன்றிணைவோம் வாருங்கள் என்கிறார். என்போல் வெளியில் சொல்ல முடியாதவர்கள் கட்சியில் அதிகமானோர் இருக்கின்றனர்” எனக் கூறினார்.