ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில், வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, நாங்களும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறோம் என்று பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் பன்னீர்செல்வம். இதனிடையே பழனிசாமி தரப்பும் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரியுள்ள நிலையில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்று அண்ணாமலையும், மற்றவர்களும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் வேட்பாளர் இளங்கோவனை எதிர்த்து நிற்கட்டும். அப்படி நின்றால் அண்ணாமலையின் துணிவை நாங்கள் வரவேற்கிறோம். இதனை நான் சவாலாகவே சொல்கிறேன்” என்றார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “இந்த தேர்தலில் பாஜகவின் பலம் என்ன என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. திமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதனால் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் ஒரு வலிமையான வேட்பாளரை நிறுத்துவோம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.