கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். இந்நிலையில், ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நேற்று (20-10-23) விசாரணைக்கு வந்த செந்தில் பாலாஜி செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அவர் அமைச்சராக நீடிப்பதால் தான் ஜாமீன் கிடைக்கவில்லை. அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும்” என்று கூறினார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,” தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வரும் அண்ணாமலைக்கு பா.ஜ.க மூத்த தலைவர்கள் யாரும் ஆதரவாக இல்லை. தமிழ்நாட்டில் அதிமுக பா.ஜ.க கூட்டணியை கலைப்பதற்கு காரணமாக இருந்த அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு அதன் பின்பு இனிமேல் அதிமுகவுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதற்கு பிறகு, பல் பிடுங்கிய பாம்பாக, பியூஸ் போன பல்பாக செயல்பட்டு வருகிறார்.
திமுக கூட்டணி வெற்றி பெற கடும் பணியாற்றியதன் காரணமாக செந்தில் பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க அண்ணாமலையின் பரிந்துரையின் பேரின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீட்டிய சதித் திட்டம் தான் இந்த கைது நடவடிக்கை. ஒரு சாதாரண வழக்கில் ஒரு குற்றவாளியை விசாரிக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகும் அவரை ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று அமலாக்கத்துறை கடுமையாக வாதாடியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில், அரைவேக்காடு அண்ணாமலை தாம் ஒரு நீதிபதி போலக் காட்டிக் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு பேசியிருக்கிறார். தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று ஒரு மாநில பா.ஜ.க தலைவர் கூறுவது நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது மிகப்பெரிய குற்றமாகும். கூலிக்கு கூட்டத்தை சேர்த்து அதிரடி பேச்சுக்களின் மூலம் தாம் ஒரு தலைவராக முடியும் என்று அண்ணாமலை பகல் கனவு காண்கிறார்.