தேர்தல் களம் சூடு பிடித்து வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து எந்தெந்த தொகுதியில் எந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளதால் ஓய்வில்லாமல் தேர்தல் பிரச்சாரத்தை வேட்பாளர்கள் செய்துவருகின்றனர்.
இந்தநிலையில் லால்குடி திமுக வேட்பாளரான சௌந்தரபாண்டியனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஏறி நிற்க முயன்றபோது, அருகாமையில் நின்று கொண்டிருந்த தொண்டர் ஒருவர் ''வருங்கால முதலமைச்சர் வாழ்க'' என்று முழக்கமிட்டார்.
இதைக் கேட்டு பதறிய நேரு, வாகனத்தை விட்டு உடனே இறங்கி ''இவர யாருப்பா கூட்டிட்டு வந்தா'' என்று கூறி உடனடியாகப் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றினார். அருகாமையில் இருந்து இதைக்கேட்ட லால்குடி திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நேருவிடம் சரண்டர் ஆனார். வெகுநேரம் கே.என்.நேரு முகம் வாடிய நிலையில் இருப்பதால் அவர் அருகாமையில் செல்ல பயத்தோடு நின்றிருந்தனர் தொண்டர்கள்.