கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சி அமைக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த தேர்தலையொட்டி, பிரபல நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான் கட்சியில் இணையவில்லை. பிரச்சாரம் மட்டுமே செய்யவுள்ளேன். எனக்கும் முதல்வருக்கும் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. என் வாழ்க்கையில் பல உதவிகளை அவர் செய்துள்ளார். அவருக்காக மட்டுமே நான் இதை செய்கிறேன். கட்சிக்காக அல்ல. அவர் நலனுக்காக பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யவுள்ளேன்" என்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், "சினிமா நடிகருக்கு யாரை ஆதரிப்பது என்ற உரிமை உள்ளது. ஆனால் சில சமயங்களில் வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ யாரை தேர்வு செய்ய வைக்கலாம் என நிர்ப்பந்திக்கவும் முடியும். மேலும் கர்நாடகாவில் பாஜக திவால் நிலையில் உள்ளது என இதன் மூலம் தெளிவாகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சை கேட்க யாரும் வராததால் பாஜகவினர் தற்போது சினிமா நட்சத்திரங்களை நம்பியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தான் கர்நாடகாவின் தலைவிதியை முடிவு செய்வார்கள் திரையுலக நட்சத்திரங்கள் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு கர்நாடக மாநில பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் பதிலளிக்கையில், "பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மிக பிரபலமான ஒரு திரைப்பட நட்சத்திரம் சமூக நீதிக்கான கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. காலையில் அவருக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்திற்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.