சும்மாவே ஆடுற காலுல சலங்கையைக் கட்டிவிட்டா கேட்கவா வேணும்? அப்படி ஒரு வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் விடுவாரா கே.டி.ராஜேந்திரபாலாஜி?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். “ஒரு அமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் ராஜேந்திரபாலாஜி” என்று ‘தமிழகம் மீட்போம்’ உரையில் அவர் வெளுத்துக்கட்ட, கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பதிலடி தந்திருக்கிறார்.
“சங்கரலிங்க நாடாருக்கு என்ன பண்ணுனாங்க தி.மு.க ஆட்சியில்? ஒரு மணிமண்டபம் கட்டினாங்களா விருதுநகர்ல? ஒரு சிலை வச்சாங்களா? முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா, எட்டு வருஷத்துக்கு முன்னால நான் செய்தித்துறை மந்திரியா இருக்கும்போது, தியாகி சங்கரலிங்க நாடாருக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் எழுப்பினாரு. சங்கரலிங்க நாடாரின் தியாகத்தைப் போற்றிய தலைவி அவர். யாரு யாரைப் பற்றி பேசுவது?
காமராஜர் பிறந்த பூமியில் என்று இவர் சொல்லக்கூடாது. பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிப்பதற்காக வீதிவீதியாகப் பிரச்சாரம் பண்ணுனவரு கலைஞர். விருதுநகருக்காரங்க நாங்க அதை மறக்கல. மானமுள்ள மண்ணு விருதுநகர் மண்ணு.. சிவகாசி மண்ணு. நீங்க யோக்கியம்னா.. உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்? உங்களை விளம்பரப்படுத்துறதுக்கு.. பீகார் வாத்தியாருகிட்ட 350 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கீங்க.
என்னய்யா இது? அண்ணா வளர்த்த தி.மு.க எப்படிப்பட்ட கட்சி! தெருவுல நின்னு போராடிக்கிட்டு இருந்த திமுகவை, இன்னைக்கு கம்ப்யூட்டர் ரூம்ல கொண்டுபோயி வச்சிட்டாரு. நீங்கள்லாம் நினைப்பீங்க. குறிப்பே இல்லாம படிக்கிறாருன்னு. குறிப்பே இல்லாம.. துண்டுச்சீட்டு இல்லாம அவரால ஒருக்காலும் படிக்க முடியாது.
எல்லாரும் ஜெயிலுக்குப் போயிருவோம்னு சொல்லுறீங்க. எங்கள மிரட்டுறீங்களா? நீங்க என்ன சர்வாதிகாரியா? சதாம் உசேனா? சதாம் உசேன் என்ன கதியானாருன்னு தெரியுமா உங்களுக்கு? நீங்க முதலமைச்சரா என்னைக்கு ஆகப் போறீங்க? நீங்க என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா? நீங்களே சொல்லுறீங்க.. கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஒரு கேஸுக்கு ஒரு வருஷம்னாலும்.. ஆயுள் முழுக்க ஜெயில்ல இருக்கணும்னு. நீங்க செஞ்ச தப்புக்கு ஆறு தலைமுறை ஜெயில்ல இருக்கணும்.
தி.மு.க ஆட்சியில அடிச்ச கொள்ளை எத்தனை? அண்ணா நகர் ரமேஷ் செத்த கொலை கேஸை எல்லாம் இப்ப நாங்க எடுக்கப்போறோம். குடும்பத்தோடு கொலை பண்ணிட்டு.. எப்படி செத்தாங்க.. பதில் சொல்லுங்க. எத்தனை பேரு செத்தாங்க? அடுத்து யாரும் சினிமா எடுக்க முடியாது. படம் எடுத்தா தியேட்டர் கொடுக்க மாட்டாங்க. தியேட்டர் கொடுத்தா ஓட விடமாட்டாங்க. கலகம் பண்ணுவாங்க. 100 கோடிக்கு படம் எடுத்தா.. 50 கோடிக்கோ.. 30 கோடிக்கோ.. இவங்க கேட்ட விலைக்குக் கொடுத்துட்டுப் போயிரணும். இவங்க குடும்பம் மட்டும்தான் படம் எடுக்கணும். வேற யாரும் பெரிய லெவல்ல பில்டிங் கட்ட முடியாது. கட்டினா அந்த பில்டிங்கை விலைக்கு வாங்கிருவாங்க. இல்லைன்னா.. அண்ணன் விருப்பப்படறாரு.. கொடுங்கம்பாங்க. எடப்பாடியார் ஆட்சியில கட்டப் பஞ்சாயத்து இருக்கா? அம்மாவோட ஆட்சியில கட்டப் பஞ்சாயத்து இருக்கா?” என்று சரவெடியாய் வெடித்துவிட்டார்.