ஓ.பி.எஸ் தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார். பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனம் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ஓ.பன்னீர்செல்வத்திற்கு அரசியல் நாகரீகம் பண்பாடு வேண்டும். யாராவது எங்கள் மேல் கல்லை வீசினால்தான் எதிர்க்கல்லை நாங்கள் மீண்டும் வீசுகிறோம். இல்லை என்றால் நாங்கள் எதிர்வினை ஆற்றுவது இல்லை. ஆளும் கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக உள்ள போதும் எங்கள் மேல் விமர்சனம் வைத்தவர்கள் மேல் நாங்கள் விமர்சனம் வைப்போம். அவர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு தகுந்தார் போல் தான் வைப்போம். அதைத் தாண்டி செல்லமாட்டோம்.
எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை படம் பார்த்துள்ளீர்களா? எம்ஜிஆர் உட்கார்ந்து கொண்டு இருப்பார். நம்பியார் அவரை அடிப்பார். உடனடியாக எம்ஜிஆர் எழுந்து இரு அடிகளை அடிப்பார். அதுபோல் தான் நாங்களும். விமர்சனம் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். முதலமைச்சராக இருந்தவர்; தமிழ்நாட்டில் முக்கியமான பல பொறுப்புகளில் இருந்தவர்; நாகரீகம் கருதி பேச வேண்டும் அல்லவா. அவர் பேசியது மாநாட்டில் அல்ல. பொதுக்கூட்டத்தில். கூலிக்கு ஆட்களை பிடித்து ஏறக்குறைய 50 கோடிக்கும் மேல் செலவு செய்து மக்களைக் கூட்டி அவர்களுக்கு சப்பாத்தி ரோல் கொடுத்து கஷ்டப்பட்டு உட்கார வைத்தார்கள். இவர் பேசும்போதே கிட்டத்தட்ட பாதி பேர் எழுந்து சென்றுவிட்டனர். இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தது.
கூட்டத்தில் என்னை, சி.வி.சண்முகத்தை, எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசுகிறார். நான் என்றைக்காவது அவன் இவன் என பேசியுள்ளேனா? இப்படி ஒருமையில் பேசுவது சரியானதா? விரக்தியின் உச்சத்தில் உலகை வெறுத்து வாயிற்கு வந்தபடி பேசுவார்கள் அல்லவா அவர்களை மரங் கழண்டு போன நட்டு என சொல்லுவார்கள். அப்படித்தான் ஓபிஎஸ் உள்ளார்” எனக் கூறினார்.