விழுப்புரம் அருகிலுள்ள சந்தான கோபாலபுரத்தை சேர்ந்தவர் 76 வயது லட்சுமி. இவர் நேற்று பிற்பகல் விழுப்புரம் நேரு வீதியில் மளிகை கடைக்கு சமையல் எண்ணெய் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி சிலை அருகே அவர் வந்தபோது மூன்று மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்துள்ளனர்.
தங்களை குற்றப்பிரிவு போலீசார் என்று அடையாள அட்டைகளை காண்பித்து அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் திருடர்கள் சுற்றித் திரிவதாகவும் கழுத்தில் காதில் அணிந்துள்ள நகைகளை பாதுகாப்பாக கழற்றி ஒரு பையில் போட்டு எடுத்துச் செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
அப்போது மூதாட்டிக்கு நகைகளை கழட்டி கையில் வைப்பதற்கு உதவி செய்வது போல ஒரு பையை கொடுத்து 5 பவுன் நகையை அதில் வைத்ததுபோல் போக்கு காட்டி திருடிச் சென்றுள்ளனர். லட்சுமி பாட்டி கடைக்கு சென்று பையை பார்த்தபோது பையில் வைத்த நகை மாயமானது தெரிந்தது அதிர்ச்சி அடைந்தார். போலீஸ் என கூறி நகையை அந்த ஆசாமிகள் மோசடி செய்து பரித்து சென்றுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து டவுன் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் போல நடித்து நகைகளை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் காந்திசிலை பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் நகரில் பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள், போலீசார் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் நகரத்தின் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.