எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த பேரவையை தொடங்கினார். ஜெயலலிதா சாயலில் இருப்பதாலும், ஜெயலலிதா உறவினராக இருப்பதாலும் தீபா அதிமுக தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் இருந்த ஒரு சிலர் விருப்பம் தெரிவித்து அவரை பேரவை தொடங்க வைத்தனர். பேஸ்புக், வாட்ஸ் அப்களில் இயங்கிக்கொண்டிருந்தது தீபா பேரவை. உறுப்பினர்கள் நீக்கம், புதிய நிர்வாகிகள் அறிவிப்பது, கட்சிக் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப்களில்தான் வெளியாகும்.

தனது பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்திருந்த இவர், திடீரென பொதுவாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுகிறேன் என்றும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என முகநூலில் பதிவிட்டார். தீபா பேரவையல் இருந்தவர்கள் அவரை தொடர்ந்து தொடர்புகொண்டு இந்த முடிவு ஏன் என்று கேட்க ஆரம்பித்தனர். பின்னர் அந்த பதிவை முகநூலில் இருந்து நீக்கியதும் ஜெ.தீபான தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்று தகவல்கள் பரவியது.
இந்த தகவல் பரவிய சில மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்தது எடுத்ததுதான். இனி அரசியலுக்கு வரமாட்டேன். என் உடல் நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறினார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, 45 வயதாகும் ஜெ.தீபாவுக்கு இரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். தனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் தனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவரோடு வாழத்தான் தனக்கு ஆசை என்று கூறியுள்ள அவர், இதற்காக மருத்துவ சிகிச்சையும், அதற்கான ஓய்வையும் எடுத்துக்கொண்டு வருகிறார்.