தினகரனின் அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணா அறிவாயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தொண்டர்களை அரவணைத்து செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். மு.க ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன். ஸ்டாலின் மீதான ஈர்ப்பால், ஸ்டாலின் முன்னிலையில் அடிப்படை உறுப்பினராக திமுகவில் இணைத்துக்கொண்டேன். தொண்டர்களின் அரவணைப்பை பெற்றவராக ஸ்டாலினை பார்க்கிறேன். கரூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளேன்.
ஆட்சி செய்கிற ஈபிஎஸ், ஓபிஎஸ் மக்கள் நலனுக்கு எதிராகவும் உரிமைகளை சூறையாடும் அரசாகவும் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை ஈபிஎஸ் அரசு விட்டுகொடுக்கிறது. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுகவில் அடிபடை உறுப்பினராக இணைத்துக்கொண்டேன். எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு, ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு வாக்களித்து, அடுத்த முதல் அமைச்சராக அவரை மக்கள் அமர வைப்பார்கள்.
நான் இருக்கின்ற இயக்கத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருக்கிறேன். என் மனதில் இருந்த இருளை அகற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது சூரியன். நான் திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தால் அது அரசியலில் மரபாக இருக்காது. தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு வேண்டாம், தேர்தலுக்கு செல்லலாம் என நான் தான் முதலில் சொன்னேன். கரூர் மாவட்டத்தில் திமுக வெற்றிக்கு நிர்வாகிகளோடு இணைந்து பாடுபடுவேன்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக மூழ்கும் கப்பல், ஸ்டாலின் தலைமையில் செயல்பட முடிவு செய்து ஒரு மாதமாக அமமுக களப்பணியில் இருந்து ஒதுங்கி இருந்தேன். மத்திய அரசை வலிமையாக எதிர்க்க கூடிய தலைவர் மு.க ஸ்டாலின்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.