Skip to main content

ஓபிஎஸ் அதிமுக இணைப்பு? - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Jayakumar explains about OPS AIADMK merger

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக சார்பில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனி வேட்பாளரை களமிறக்கினர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் ஓ.பி.எஸ் அணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு, இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வோம்., ஆனால் இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கமாட்டோம் என ஓ.பி.எஸ் அணியின் கு.பா.கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசு இயந்திரத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தி அதன்மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெறும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு இருந்தாலும், ஒட்டு மொத்த திமுக காரர்களையும் ஈரோடு கிழக்கில் குவித்து வைத்திருந்தாலும் மகத்தான வெற்றி இரட்டை இலைக்கு கிடைக்கும். 

 

ஓபிஎஸ் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். இப்பொழுது திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். கசாப்புக் கடைக்காரனை ஆடுகள் நம்பினால் ஆடுகளுக்கு என்ன கதி ஆகும். அந்த கதி தான் ஓபிஎஸ் வேட்பாளருக்கும் ஆகியுள்ளது. இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதற்காக வாபஸ் பெற்றதாக சொல்கிறார். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்கள். ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பிற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள். அது எப்படி சந்திக்க முடியும். அதற்கு வாய்ப்புகள் என்பது 100% இல்லை. இது இடைக்கால மனு, இபிஎஸ் தாக்கல் செய்து இரட்டை இலையை நாம் பெற்றுள்ளோம். 

 

ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை முழுக்க முழுக்க திமுகவின் பி-டீம் ஆக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தார். தற்போது அது முடியாது என்ற காரணத்தால் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை பெற்றதில் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்க போகிறோம் என சொல்கிறார். தென்னரசு என சொல்லுவதற்கு வாய் வலிக்கிறதா? வேட்பாளரை திரும்ப பெற்றதற்கு செங்கோட்டையன் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தரப்பு கு.பா.கிருஷ்ணன் மாப்பிள்ளைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாம். நான் சொன்னது கட்சி ரீதியாக இணைப்பு சாத்தியமில்லை

 

மீண்டும் சமாதான முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபடுவார் என ஓபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். அது எப்படி முடியும். அவர்களது செயல்பாடு திமுகவை சார்ந்து உள்ளது. ஓபிஎஸ் அதிமுக சமாதானம் நடக்காது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்