மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை சறுக்குப் பாறை பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் உரையாற்றினார்.
அதில், “ஏழ்மையை வெகு ஜாக்கிரதையாக அரசியல் கட்சிகள் பாதுகாக்கின்றன. அதனால்தான் ஏழ்மையின் மீது எனக்கு கோபம் இருக்கிறது. திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தியின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வேட்பாளரின் நண்பர் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். ஏழரை கோடி பேரோடு எனக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் டிக்கெட் வாங்கினால்தான் நான் நடிக்க முடியும். அதில் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள்.
உதயநிதி தயாரிப்பில் நான் நடித்துள்ளேன். அவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதற்காக நான் ஊழல் செய்தவனாக ஆகிவிடுவேனா? அது வேறு, இது வேறு. தமிழில் வசனம் எழுத ஆள் இல்லாததால், வட நாட்டிலிருந்து தேர்தல் வெற்றிக்காக ஒரு ஆளை அழைத்து வந்துள்ளார்கள். பா.ஜ.க.வை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தேடிப் போய் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை ‘பி’ டீம் என பரப்பியது தி.மு.க.தான்.
நான் ஒருவருக்கு ‘பி’ டீமாக இருப்பேன் என்றால், அது காந்திக்குத்தான். தி.மு.க வெற்றி பெற்றால் அவர்களும் மத்திய அரசுக்கு கை கட்டியிருப்பார்கள். லேடியா?...மோடியா? என ஜெயலலிதா பேசினார். நான் இப்போது கேட்கிறேன் “அந்த தாடியா? இல்லை, இந்த தாடியா?.” மத்திய அரசை தைரியமாக கேள்வி கேட்க ஆள் வேண்டும். நான் இப்போது கேட்டுவிட்டேன். உடனே பா.ஜ.க பணம் அனுப்புவார்கள், அது சன் நியூஸில் வரும்.
ரெய்டு விட்டால் மக்கள் நீதி மய்யத்தின் மீதும் கமல்ஹாசன் மீதும் விடுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது விடாதீர்கள். இலவசங்கள் ஏழ்மையை போக்கவே போக்காது. நான் மீன் பிடிக்க கற்றுத் தருகிறேன். உழைப்பதற்கான எல்லா வசதிகளையும் நாங்கள் தருகிறோம். நேர்மையின் மீட்சிக்காக நாங்கள் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறோம். திருடாமல் இருந்திருந்தாலே இரண்டு தமிழகத்தை சுபிக்ஷமாக வைத்திருக்கலாம்” என பேசினார்.