பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று (28/04/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.
"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துப் பேசியுள்ளார். பெட்ரோல் மீதான வரியை ஏற்கனவே தமிழக அரசு குறைத்துள்ளது. சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? பெட்ரோல் விலையைக் குறைப்பதுபோல நடித்து மற்றவர் மீது பழியைப் போடுவது யார் என மக்களுக்குத் தெரியும். பெட்ரோல் விலையைக் குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடுமையாக வரி உயர்த்தியது" என மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா? என்ற விவாதம் எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது, ''நமது உலகத்தில் இருக்கக்கூடிய நாடுகளை பெட்ரோல், டீசலை பொறுத்தவரை இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும். ஒன்று தாங்களே பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள், இரண்டாவது அதை இறக்குமதி செய்யக்கூடிய நாடுகள். இறக்குமதி செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் தான் இந்தியா இருக்கிறது. அப்படி பார்த்தாலும் கூட சிங்கப்பூர், நெதர்லாந்து போன்ற எரிபொருள்களை இறக்குமதி செய்கிற மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நாம் மிக மிக குறைவாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்திருக்கிறோம். அதேபோல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய ரஷ்யாவை தவிர விலை குறைவாக மக்களுக்கு பெட்ரோல் டீசலை கொடுத்துக் கொண்டிருப்பது இந்திய அரசுதான். இதுமட்டுமல்ல ரொம்ப முக்கியமான விஷயம் கடந்த நவம்பர் மாதம் முதல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைத்ததனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அறிக்கை சொல்லியுள்ளார்கள்.
இது இல்லாமல் மற்ற மாநிலங்களில் வாட் வரி குறைப்பினால் அந்த மாநிலங்களுக்கு எல்லாம் 15,969 கோடி ரூபாய் இழந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு மாற்றாக நவம்பர் மாதம் மத்திய அரசு விலையைக் குறைத்தது. அதற்குப்பின்னால் வாட் வரியை குறைக்காத மாநிலங்களில் முக்கியமாக வருவாய் பெறுகின்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 484 கோடி ரூபாய் வருமானத்தை பெட்ரோல், டீசல் வாட் வரி மூலமாக தமிழகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாகக் கடந்த நவம்பரில் இருந்து இப்போது வரைக்கும் 2,800 கோடி ரூபாயை தமிழக அரசு வாட் வாரியாக பெட்ரோல் டீசலில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் குறைக்கும் பொழுது மாநில அரசும் வரியைக் குறைத்தால் ஏழை எளிய மக்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும்'' என்றார்.