காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை அரசியலாக்காமல் கிடப்பில் உள்ள பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 37 கிளை நதிகளில் தமிழக பகுதிகளில் அணைக்கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருப்பதுடன், தமிழக அரசின் நலனுக்காக மேகதாது இடையே அணைக்கட்டும் பணியை தடுத்தது மத்திய அரசு என்றும் குறிப்பிட்டார். உள்நோக்கம் இல்லாமல் மாணவர்களின் விருப்பத்துடன் நடந்த ஐ.ஐ.டி. விழாவை உணர்வுப்பூர்வமான மொழியை வைத்து அரசியல் செய்ய நினைப்பதற்கு கண்டனம் தெரிவித்தவர், மற்றவர்களை விட பாஜகவிற்கு தமிழ்ப்பற்றும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் அக்கறை உள்ளதாகவும், இருப்பினும் பாடல் விவகாரத்தில் ஐ.ஐ.டி. கவனம் செலுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
'
மோடி வருகையால் நிறுத்தப்பட்ட கட்சியை பலபடுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் யாத்திரை மீண்டும் மார்ச் 1 முதல் துவக்கப்படவுள்ளதாகவும், பாஜவின் வளர்ச்சி திட்டங்களை வெளியே வராமல் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் தடுப்பதாக குற்றச்சாட்டியவர், 133 டி.எம்.சி. கோதாவரியிலிருந்து கொண்டு வரப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெளிவாக கூறியிருந்தும், மத்திய அமைச்சர்களின் வருகை அரசியலாக்கப்படுவது வேதனைக்குரியது என்றார். மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து தமிழ் உதாசீனப்படுத்தப்பட்டு வருவதாக ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த அவர், தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது திமுக ஆட்சியில் இருந்ததாக குறிப்பிட்டார். தெளிவான தொழில் முனைவோர் சட்டம் தமிழகத்தில் இல்லை என்றும், இந்தியாவில் 1 % மட்டுமே தொழில் முனைவோரை தமிழகம் ஈர்த்துள்ளதாக புள்ளி விவரங்கள் உள்ளதை சுட்டிக்காட்டியவர், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.