அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறிச் செயல்பட்டால் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம் என்றும் பதில் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகளின்படி தான் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறிச் செயல்பட்டால் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம். அதற்குரிய பதிலை துறையின் சார்பாக அளிக்கத் தயாராக உள்ளோம்.
தவற்றுக்கு இடம் தராமல் பக்தர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள அரசு தயாராக உள்ளது. சுற்றுப்பயணங்களின்போது கூட விமர்சனங்கள் விசமத்தனமாக இருக்கக்கூடாது என முதல்வர் சொல்லியுள்ளார். திருவண்ணாமலையில் குறைகளைத் தெரிந்ததும் நிவர்த்தி செய்துள்ளோம். குறைகள் தெரிந்ததும் அதைச் சரி செய்ய இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.
திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை விஐபி தரிசனத்தை படிப்படியாகக் குறைப்பது. கடந்தாண்டு விஐபிக்களுக்கு அனுமதிக்கப்பட்ட டோக்கன்களை இந்தாண்டு 20% குறைத்துள்ளோம். 123 இடங்களில் பேருந்து நிலையங்களை ஏற்படுத்தியுள்ளோம். 2692 சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலை தீபத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.