தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலர்கள், மேயர், நகர்மன்றத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் பதவியேற்பும் நடைபெற்றன.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை வென்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட இடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணிக்கு சில தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல், திமுக போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களை அதன் தலைமை அறிவித்தது.
இதில் சில இடங்களில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து திமுகவினர் போட்டியிட்டு வென்றனர். அதேபோல், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து திமுகவினரே நின்று வெற்றி பெற்றனர். இதனை அறிந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்” என்று அறிக்கை விட்டார். மேலும், அப்படி தலைமை அறிவிப்பை மீறி வென்றவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பதவி விலகாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து வென்றவர்கள் பதவி விலகினர்.
இந்நிலையில், வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள் மீது திமுக தலைமை ஒழுங்க நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் - துணைத் தலைவர் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும் - கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட; திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் நகரக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ்; தேனி வடக்கு மாவட்டம், தேனி நகர கழகப் பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர கழகப் பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ்; நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர் கழகச் செயலாளர் பி. மாதேவ் ஆகியோர், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.