நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்குள்ள பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் கருப்பையா பேசுகையில் “உங்களுக்காக உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். அந்தநல்லூர் ஒன்றியம் மற்றும் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவேன். இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான பெட்டவாய்த்தலையில் பிரியும் கட்டளை வாய்க்காலில் கதவணைப் பாலம் கட்டி தருவேன்” என்று கூறினார்.
இந்த பிரச்சாரத்தில் திருச்சி மாவட்ட அதிமுக கட்சி பொறுப்பாளர்கள், தே.மு.தி.க கட்சி பொறுப்பாளர்கள், எஸ்.டி.பி கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.