குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக நேற்றே அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்தார்.
இந்த நிகழ்வில் இபிஎஸ் தரப்பின் சந்திப்பிற்கு பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் திரௌபதி முர்முவை மேடையில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ''அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக, தமிழகம் வந்துள்ள திரௌபதி முர்முவை வரவேற்கிறேன். கட்சியின் சட்டவிதிப்படி தற்பொழுது வரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்'' என்றார்.
அண்மையில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் அதிமுகவில் சூடுபிடித்துள்ள நிலையில் இபிஎஸ் சார்பில் ஓபிஎஸ்க்கு எழுதப்பட்ட கடிதத்தில் ''அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு 27ம் தேதியே நிறைவடைந்த வேட்புமனு தாக்கலுக்கு 29ம் தேதி கடிதம் அனுப்புகிறீர்கள். நீங்கள் ஒருங்கிணைப்பாளரே கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பொதுக்குழு அதற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் அந்த பதவி காலாவதியாகிவிட்டது" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.