“தமிழக முதலமைச்சர் அனுபவிக்கும் வேதனையை நான் 5 வருடம் அனுபவித்தேன். 5 வருடம் நிர்வாகத்தை நடத்தினேன்” எனப் புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் பொட்டியில் பாம்பு அடங்குவது போல் அடங்கி இருக்கிறார்கள். யாரும் அந்த அரசாங்கத்தைப் பற்றி எதுவும் பேசுவது இல்லை. இதற்கு சூத்திரதாரி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆளுநர்களை தூண்டி விடுகின்றனர். தமிழ்நாட்டில் பாருங்கள். கிரண்பேடி ஐந்து வருடம் என்னைத் தூங்கவிடவில்லை. கோப்புகளை அனுப்பினால் கிரண்பேடி திருப்பி அனுப்புவார். எதிர்க்கட்சிகள் என்னிடம் கேட்பார்கள். என்னால் வெளியில் சொல்ல முடியாது.
இன்று தமிழக முதலமைச்சர் அனுபவிக்கும் வேதனையை நான் 5 வருடம் அனுபவித்தேன். 5 வருடம் நிர்வாகத்தை நடத்தினேன். கிரண்பேடியிடம் சண்டை போட்டாவது காரியத்தை சாதித்தோம். ஆனால் தமிழிசை முதலமைச்சர் ரெங்கசாமிக்கு வெல்லத்தை கொடுத்து சாகடிக்கிறார். எந்த கோப்புகளுக்கும் கையெழுத்து போடுவதில்லை. அண்ணன் அண்ணன் என சொல்லி நன்றாக பேசுகிறார். இவரும் தங்கச்சி என சொல்கிறார். அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் ஒரு வேலையும் செய்வது இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் நிதி பற்றாக்குறை. எப்போது இந்த அரசு திவாலாகும் எனத் தெரியவில்லை.
உண்டியல் வசூல் செய்து ஆளுநர் தமிழிசைக்கு தனி விமானம் ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து தெலுங்கானாவிற்கு சென்று சேர்ந்துவிடுங்கள். அங்குள்ள ராஜ்பவனில் இருங்கள். புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் வேறு நிற்க இருப்பதாக செய்திகள் வருகிறது. ஆளுநர்கள் கோப்புகளுக்கு கையெழுத்து போடுவதில்லை. இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்த மாநில அரசுகளை பழிவாங்கும் நடவடிக்கை” எனக் கூறினார்.