நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.கவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக பா.ஜ.க மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார். அதனையடுத்து, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியபோது, அவர் அக்கட்சியில் இணைவார் எனத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.கவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.