கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரில், ரிங் ரோடு மற்றும் நகர்ப்புற சாலை சந்திக்கும் இடத்தில் பெரியார் சதுக்கம் என பெயரிட அப்பகுதி குடியிருப்போர் சங்கத்தினர் சார்பில் 2015ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் ஓசூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின் போது 100 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. இதில் பெரியார் சதுக்கம் அமைப்பது என்கிற தீர்மானம் இருந்ததை கண்டித்து ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் பாஜக, விஎச்பி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாமன்றக் கூட்டத்தில் இருந்து பாஜக மாமன்ற உறுப்பினர் வெளியேறியதும், பெரியார் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுகளும் அரங்கேறின.
இந்நிலையில், பெரியார் சதுக்கம் எனப் பெயரிட எதிர்த்துப் போராடிய பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்து ஓசூர் மாநகராட்சி, அண்ணா சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் காங்கிரஸ், திராவிடர் கழகம், இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஏராளமான ஜனநாயக அமைப்பினர் பங்கேற்றிருந்தனர். ஓசூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக மண்டல செயலாளர் பொ.மு.நந்தன், மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ் உள்ளிட்ட விசிகவினர் மற்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஊமை ஜெயராமன், வனவேந்தன், காங்கிரஸ் இயக்கத்தின் மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.