Skip to main content

பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை - நீதிபதி குமரேஷ் பாபு

Published on 19/03/2023 | Edited on 19/03/2023

 

High court order on ADMK Case

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத் தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டது. 


பொதுச்செயலாளர் தேர்தல்; ஓ.பி.எஸ். தரப்பில் என்ன வாதிடப்பட்டது?


இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இன்று காலை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். 


முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, நேற்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததும், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். 

  
“கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் பதவிகள் பறிக்கப்படும்..” - இ.பி.எஸ். தரப்பு வாதம் 


அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தனது அணியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கை எப்படி எதிர் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


“நீதிமன்றங்களில் ஏழு முறை தோற்ற ஓ.பி.எஸ். தரப்பு” - அதிமுக வழக்கறிஞர் வாதம் 


இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்காக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோ ஆஜராகினர். இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன் மற்றும் அதிமுக விஜயநாராயண் ஆகியோர் ஆஜராகினர்.

 

அதனைத் தொடர்து மூன்று தரப்பினரும் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தபிறகு நீதிபதி குமரேஷ் பாபு, “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்