தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
மழைநீர் தேங்குவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதன் விளைவுகளைப் பற்றியும் அமைச்சர்கள், தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்த இடங்களில் நேரடி ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் “சென்னையில் ஓரிரு நாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது; இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய வெள்ள நீர் கால்வாய் பணிகளைத் தொடராமலும், முழுமையாக முடிக்காததாலும் நிறைய இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருக்கிறது; இந்த ஏமாற்று அரசை நம்பாமல் மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் அம்மாவின் அரசை குற்றம் சொல்லி திசை திருப்பாமல், மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை திமுக அரசுக்கு இருக்கிறது” என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். மேலும் பாரதியாரின் பாட்டை மேற்கோள் காட்டிப் பேசி இருந்தார்.
இதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “இந்த மழையின் கால அளவு நீடித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் மீது பழனிசாமிக்கு அக்கறை இருந்திருந்தால் மூன்று நாட்களும் எங்காவது வெளியில் சுற்றி இருக்க வேண்டும். இதிலிருந்தே தெரியும் யார் வாய்ச் சொல்லில் வீரர். யார் செயல் வீரர் என்பது தெரியும். கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகள் செய்த செயல்களை முதல்வர் ஓராண்டில் செய்துள்ளார்.
நேற்று பாரதியாரின் பாட்டினை மேற்கோள் காட்டி பேசி இருந்தார். அதில் கடைசி வரியை மறந்துவிட்டார் போலும் அதை நான் சொல்லுகிறேன். ‘அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி கிளியே’ என்று பாடி முடித்திருப்பார்.
நீங்கள் குறை கூறினாலும் எங்கள் பணி தொடரும். கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசுக்குப் பயந்து பயந்து திட்டங்களைக் கொண்டு வராமல் ஆட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்று செயல்பட்ட ஆட்சி கடந்த ஆட்சி” எனக் கூறினார்.