அரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
நாங்கள் சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்து இருக்கிறோம் என்று இப்பொழுது பெரிய ஐயா சொல்லியிருக்கிறாரே. ஆனால், அழிவு சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருக்கின்றது. இதுதான் உண்மை. ஒன்று மட்டும் உண்மை. நன்றி உணர்ச்சி இல்லாதவர்கள் தான் நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்து இருக்கக்கூடிய அந்தத் தலைவர்கள்.
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுப் போராடியவர்கள் தான் மறுக்கவில்லை. ஆனால், போராடியவர்களை அன்றைக்கு அ.தி.மு.க ஆட்சி எந்த அளவிற்கு கொடுமை படுத்தியது. ஏன் போராட்டம் நடத்திய நேரத்தில் சுட்டுக் கொன்றது. அதற்குப் பிறகு 1989 தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகின்றது. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்து அமர்ந்து அதற்குப் பிறகு, வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட பல சக்திகள் எல்லாவற்றையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்ற தனி இட ஒதுக்கீட்டை 20 சதவிகிதம் பெற்றுத் தந்த தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
அந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நேரத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி வழங்கினார்கள். கடந்த 30 வருடமாக பார்க்கின்றோம். அந்த இட ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால் தான், இன்றைக்கு படித்துவிட்டு வேலைக்குச் சென்று சமூகத்தில் முன்னேறிய அந்த சமூகத்து மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் பெரிய ஐயா மறந்து இருப்பது தான் வேதனையாக இருக்கின்றது, வெட்கப்பட வேண்டியதாக இருக்கின்றது.
வன்னிய இன மக்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை கலைஞர் கொடுத்து விட்டார். அதை அவரால் தாங்க முடியவில்லை. அது அவருக்குப் பிடிக்கவில்லை, ஏன் என்றால் அதை வைத்துக்கொண்டு தான் அவர் தொடர்ந்து அரசியல் நடத்தி இருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு எதிர்க்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறார்.
அவருடைய துரோகத்தைப் பற்றி நான் அதிகமாக சொல்ல விரும்பவில்லை, அவருக்கு மிக மிக நெருக்கமாக இருந்து மறைந்தார் காடுவெட்டியார் காடுவெட்டி குரு அவர்கள். அந்தக் காடுவெட்டி குருவின் குடும்பம் இப்பொழுது திரும்பத் திரும்ப என்ன சொல்லுகின்றது. தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே பெரிய ஐயா கவலைப்படுவார். மற்றவர்களைப் பற்றி அவர் கிஞ்சிற்றும் கவலைப்படமாட்டார், என்று அந்தக் குடும்பம் இன்றைக்கு பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.
5 வருடமாக பி.ஜே.பி-யை விமர்சித்துவிட்டு அவர்களோடு இன்றைக்கு கூட்டு செய்கின்றார் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள் சுயநலம். அவர் இருக்க வேண்டிய இடமும் அதுதான். இவ்வாறு பேசினார்.