![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/8TaTSblrla3Wdb3QwG2jSg9l1IGgkQd_aaJnvd-WqYY/1618552549/sites/default/files/inline-images/408_4.jpg)
சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான கடம்பூர் ராஜு போட்டியிட்டார்.
தேர்தல் முடிந்த பிறகு அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் தினகரன். கோவில்பட்டி உட்பட மூன்று தொகுதிகளில் அமமுக வெற்றிபெறும் என்று ஆலோசனையில் பேசப்பட்டது. அப்போது அதிமுக தோல்விதான் முக்கியம் எனவும், அமமுக பற்றி கவலை வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டதாம்.
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/O59xQZ6sxURQHnmXEAShf36qtg1b4Hs_6vh_f8U3hYM/1618554642/sites/default/files/inline-images/502_39.jpg)
இதனிடையே தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், தஞ்சை மாவட்டம் பூண்டி துளசி வாண்டையாரின் பேரனான ராமநாதனுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சசிகலா விடுதலையான பிறகு திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என மாற்றப்பட்டது.
தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஓய்வு எடுக்காமல் மகளின் திருமணத்திற்கான பணிகளில் இருக்கிறாராம் தினகரன். தற்போது திருமணத்திற்கு நாள் குறித்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதம் திருவண்ணாமலை கோவிலில் திருமணத்தை நடத்த இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தஞ்சையில் வரவேற்பு நிகழ்ச்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமண விழாவில் சசிகலா உரை இருக்கும் என்றும் மீண்டும் அரசியல் எண்ட்ரி குறித்து அதில் சசிகலா உரையாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பிருந்தே சசிகலா கோவில் கோவிலாக தரிசனம் செய்து வருகிறார். அப்போது அமமுக மட்டுமல்ல, அதிமுக நிர்வாகிகள் சிலரையும் சந்தித்துப் பேசி வருகிறார். தற்போது டிடிவி தினகரனையும், தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் அமைச்சர்கள் சிலரும், எம்எல்ஏக்கள் சிலரும் சந்தித்து, “கொஞ்சம் விட்டுப்பிடிங்க” என்று கேட்டுக்கொண்டார்களாம். அதனால் தனது கட்சி நிர்வாகிகளை அடக்கிவாசியுங்கள் என்று விட்டுக்கொடுக்க சொல்லியிருந்தாராம் டிடிவி தினகரன். தேர்தல் முடிவு வந்த பிறகு நடக்க உள்ள தங்களது இல்ல திருமண விழாவில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சசிகலாவை பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் தினரகன் உறவினர்கள் உள்ளார்களாம். வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழ்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.