அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
அவரும், உடன் இருந்த செவிலியர்களும் கரோனா உடை அணிந்திருந்தனர். ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று வாக்களித்துவிட்டு, மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் மதுசூதனன் மனைவி ஜீவா ஆகியோர் வாக்குப்பதிவு மையத்தில் உடனிருந்தனர்.
இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுசூதனன் மனைவி நேற்று (19.04.2021) காலமானார். மதுசூதனன் மருத்துவமனையில் இருக்கும்போது அவரது மனைவி காலமானது அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுசூதனன் மனைவி ஜீவா மறைவு செய்தி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனனின் மனைவி ஜீவா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
பாசமிகு மனைவியை இழந்து வாடும் அன்புச் சகோதரர் மதுசூதனனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் ஜீவாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” இவ்வாறு கூறியுள்ளனர்.