Skip to main content

“ஆளுநர் பதவி விலக வேண்டும்” - ஆர்.முத்தரசன்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

"Governor should resign" - R. Mutharasan

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரபல தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி 04.05.2023 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது. இப்பேட்டியின் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னை மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

 

பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துக் கொண்டு, அப்படி இல்லை என்று பொய் சொல்கின்றார். தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாமல் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சார்ந்த என்.ஜி.ஓ. அமைப்பை நியாயப்படுத்துகின்றார்.

 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தமிழ்நாடு அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. முன்வைக்கும் ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், மதச்சார்பின்மை பற்றி அரசியல் நிர்ணய சபையில் பேசவில்லை என்று கூறுவதன் மூலமும், திராவிட மாடலை கொச்சைப்படுத்துவதன் மூலமும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. உறுப்பினராகவே வெளிப்படுத்தியுள்ளார்.

 

இப்படி ஒரு பேட்டியை அளித்ததன் மூலம் ஒரு ஆளுநர் என்ற முறையில் தன் அரசியல் அமைப்புக் கடமையிலிருந்து தவறிவிட்டார். எனவே, தமிழ்நாடு ஆளுநரை வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடியாக அவர் பதவி விலக வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்