மக்களின் வரிப்பணமே 'பொங்கல் பரிசு' என்ற பெயரில் மக்களிடம் போய்ச் சேர்கிறது. ஆனால், ஏதோ சொந்த நிதியிலிருந்து தாங்களே கொடுப்பது போல், விளம்பரம் தேட ஆளும்கட்சி முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது எதிர்க்கட்சி. அதனால், திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தமிழக அரசு உத்தரவாதம் அளித்த நிலையில், டோக்கன்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அடுத்து திமுக தரப்பில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன்பாக, ஆளும்கட்சியினர் பேனர்கள் வைத்து, இடையூறு எற்படுத்துவதாக இன்னொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகாசி – பள்ளபட்டி பஞ்சாயத்தில் உள்ள ரேஷன் கடையில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி, பொங்கல் பரிசுத் தொகுப்புகளை தன் கையால் வழங்குகிறார் என்றும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகளைச் சேகரிப்பதற்கு, இந்த விளம்பர உத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றும், திமுக தரப்பில் குமுறலாகச் சொன்னார்கள்.
அதிமுக தரப்பிலோ, எங்களைக் குற்றம் சொல்வதற்கு திமுகவினருக்கு அருகதை கிடையாது. சிவகாசி பள்ளபட்டி ஊராட்சித் தலைவர் (திமுக) உசிலை செல்வமும், அவர் கையால்தானே பரிசுத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்குகிறார் என்று பதிலுக்குக் குற்றம் சாட்டினர்.
சிவகாசியில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்! அரசுப் பணம் என்பது ஆளும்கட்சியினரின் சொந்தப் பணம் அல்லவென்பதை அறியாதவர்களா மக்கள்? திமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் பொங்கல் பரிசுபெறும் மக்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்களா? வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் தேவையா இந்தத் தேர்தல் பப்ளிசிட்டி?