மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 51 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தமாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தற்பொழுது மாநாட்டு மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும்; எந்த நபராலும் முடியாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்த மிகப் பெரிய கட்சி அதிமுக தான். எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக அழித்துவிடும் என்று நினைத்தனர். அது நிறைவேறவில்லை. பிரிந்த கட்சியை ஒன்றாக இணைத்து அதிமுகவைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. எனக்கு புரட்சித்தமிழர் பட்டம் கொடுத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி. தொடங்கிய ஆறு மாதத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுக தான். கடைக்கோடியில் உள்ள சாமானியனுக்கு கூட அதிமுக ஆட்சியில் நன்மை கிடைத்துள்ளது.
1989-ல் சேவல் சின்னத்தில் நின்று முதன்முதலாக வெற்றி பெற்றேன். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம். அமைச்சர் ஆனேன். உங்களுடைய ஆதரவால் தமிழகத்தின் முதலமைச்சராக நான் வந்தேன். அப்பொழுது இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு விமர்சனத்தை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார். இந்த ஆட்சி 10 நாட்கள் தாக்குப் பிடிக்குமா; ஒரு மாதம் தாக்குப் பிடிக்குமா; மூன்று மாதம் தாக்கு பிடிக்குமா என்று ஏளனம் கேலி செய்தார். உங்களுடைய மகத்தான ஆதரவின் பேரிலே, தமிழக மக்களின் பேராதரவால் நான்கு வருடம் இரண்டு மாத காலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். நான் பொறுப்பேற்ற பொழுது கடுமையான வறட்சி. பல பகுதியிலே குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை.
சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்தோம். அது ஒரு சாதனை. அதற்குப் பிறகு கஜா புயல். டெல்டா மாவட்டம் முழுவதும் அழிந்துவிட்டது. புயலால் அதிமுக ஆட்சியில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு கலந்து பேசி புயல் எந்த அளவுக்கு வீசியதோ புயல் வேகத்தை காட்டிலும் வேகமாக செயல்பட்டு புயலுடைய அடிச்சுவடு இல்லாமல் திறமையாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. அப்படி ஒரு சாதனை படைத்தோம். அதன்பிறகு கரோனா. சாதாரண கரோனா அல்ல முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட கரோனாவை அதிமுக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு கரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தில் இருந்து அகற்றிய அரசாங்கம் அதிமுக அரசாங்கம்'' என்றார்.