தமாகா தலைவர் ஜி.கே. வாசன் இடைத்தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து மக்கள் எண்ணங்களை பிரதிபலித்து எதிர்மறை வாக்குகளை முழுமையாக பெற்று வெற்றி பெறும் நிலையில் அதிமுக வேட்பாளர் போட்டியிடுவார்.
அனைத்து கட்சிகளும் மக்களை சந்திப்பதற்கு அதிகமான நேரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் திமுகவை எதிர்த்து மக்கள் எதிர்மறை ஓட்டுகளைப் போடத் தயாராக இருக்கிறார்கள். அதற்கு காரணம் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. அதனால் அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அதனை உறுதியாக தேர்தலில் பிரதிபலிப்பார்கள்.
அதிமுக தரப்பிலிருந்து ஓபிஎஸ் என்னை வந்து சந்தித்தார். என் ஆதரவு யாருக்கு எனக் கேட்கின்றனர். தமாகா தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக உடன் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலிருந்து தேர்தல் கூட்டணியில் இருக்கிறது. அது தொடர்கிறது” எனக் கூறினார்.