மதுரை மாணவருக்கு திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் சேர லட்சத்தீவில் தேர்வு மையம் கொடுத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய கல்வித்துறை செயலருக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்ததால் மதுரை மாணவருக்கு மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் "தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் உள்ளது. அதற்கு தேர்வு எழுத தேர்வு மையம் லட்சத்தீவில் போடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு மும்பையில் தேர்வு மையம் போடுவது இதையெல்லாம் உடனுக்குடன் தலையிட்டு சரிசெய்கிறோம். மத்திய அரசு மற்றும் தேர்வு நடத்தும் துறைகள், இந்தியா முழுதும் உள்ள மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதும் போது அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களின் மீது தேர்வு நடத்துகிறவர்கள் மனோரீதியான யுத்தத்தை தொடர்ச்சியாக நடத்துகிறார்கள்.
அதே போல நாடு முழுதும் பொது நுழைவுத்தேர்வு என்ற கொள்கையே முற்றிலும் தவறான விஷயம். அந்தந்த மாகாணத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும்.
அரசுப் பேருந்து என்பது கல்விச் சாலையினுடைய நடவடிக்கையோடு இரண்டற கலந்தது. அரசு பேருந்தை குறைத்தலென்பது கிராமப்புற மாணவர்களின் வருகையை குறைத்தல் போலாகும். எனவே கல்வி நேரத்தில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்.மாணவர்கள் படியில் தொங்குவதை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் தமிழகத்தை கோவையுடன் இணைக்கும் பாதைகள் அகலப்பாதைகளாக 100 கோடிக்கும் அதிகமாக செலவழித்து மாற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் நேரடி ரயில் இயக்கப்படாததால் ரயில்வே துறையின் பொது மேலாளருக்கு கடிதம் அளித்திருந்தேன். இன்று மதுரையில் இருந்து கோவைக்கு நேரடி ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு நன்றி.
குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து பதவி விலகியது மோடி சிந்திய கண்ணீரால் கரைந்தார். காங்கிரஸ் கட்சிக்கு இதனால் இழப்பு ஒன்றும் இல்லை" என கூறினார்.