நாட்டின் பெருமை காந்தியா? வல்லபாய் படேலா? அம்பேத்கரா? இந்தியாவைத் தாண்டி அவரை வேறெங்காவது தெரியுமா? என சீமான் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளினை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல. உலகெங்கும் மானுட சமூகம் எங்கெங்கு தாழ்த்தப்படுகிறதோ அவர்களுக்கு எல்லாம் ஆன தலைவன். அதைப் புரிந்து கொண்டவர்கள்தான் நாம் தமிழர்கள்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அதிக அளவில் அம்பேத்கரை கொண்டாடுகிறார்கள். இதற்கு காரணம் வாக்குதான். வேறென்ன காரணமாக இருந்துவிட முடியும். அவர்கள் எந்த அளவிற்கும் போவார்கள். வேறென்ன காரணமாக இருந்துவிட முடியும். வல்லபாய் படேலுக்கு எதற்கு 3000 கோடிக்கு சிலை வைத்தீர்கள். நாட்டின் பெருமை காந்தியா? வல்லபாய் படேலா? அம்பேத்கரா? இந்தியாவைத் தாண்டி எங்காவது வல்லபாய் படேலை தெரியுமா. மலேசியா சிங்கப்பூரிலாவது கேட்போம். அதிக தூரம் கூட வேண்டாம்.
மீண்டும் பாஜக தான் வெற்றி பெறும் எனக் கருத்துக்கணிப்புகள் சொல்லுகிறது. தேர்தலில் வாக்குப் பதிவு நடந்த காணொளிகளை உங்களுக்கு அனுப்புகிறேன். அதை வெற்றி என சொல்லுவது கேவலம். அது ஒரு வெற்றியா? ஒருத்தர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் அருகே நின்று கொண்டு ஒரே ஆள் மொத்த வாக்கையும் செலுத்துகிறார். இதை வெற்றி எனச் சொல்ல முடியுமா? நாங்கள் 8 ஆவது முறை வெற்றி பெறுகிறோம் எனச் சொல்லுகிறார்கள். 80 ஆவது முறை கூட வெற்றி பெறுங்கள். அது கேவலம்” எனக் கூறினார்.