பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார். அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவோடு இணைத்தார்.
அமரீந்ஹர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் கட்சியில் இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இவருக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கே நீடித்து வந்தது. இதனை அடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக சித்துவை நியமித்த பின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவிக்காலம் முடியும் முன்பே அதில் இருந்து ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகிய அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த புதிய கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தார். ஆனால் அமரீந்தர் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றனர். இதனை தொடர்ந்து தனது கட்சியுடன் பாஜகவில் இணைந்து விடுவார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.