தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.