தனக்கு பிரதமராகும் எண்ணமோ, ஆசையோ கிடையாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மறுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருவேளை பெரும்பான்மையை இழக்கும்பட்சத்தில் மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்க கூட்டணி கட்சிகள் விரும்பமாட்டார்கள் என்றும், பிரதமர் பொறுப்பிற்கான தேர்வில் நிதின் கட்காரியும் இருப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக பேசியுள்ள மத்திய போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, ‘நான் பிரதமராக விரும்பவில்லை. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் நம் நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். எனது விருப்பமெல்லாம் நேர்மறையான வேலையும், மக்களை பயம், பட்டினி மற்றும் தீவிரவாதத்தில் இருந்து விலக்கி அவர்களை மகிழ்விப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘மோடியின் பதவிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அடுத்த பிரதமராகும் தகுதியும் அவருக்குத்தான் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.