ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
இந்நிலையில் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமன தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றின. விருதுநகரில் மறுவாக்குப்பதிவு வேண்டுமென்ற பிரேமலதாவின் கருத்திற்கு உடன்படுகிறேன். எனது ஆளுநர் பதவி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.
எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், திமுகவிற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது உண்மை. பாஜக - அதிமுக கூட்டணி நீடித்திருந்தால் நிச்சயம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தற்போது பேச முடியாது. ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து” எனத் தெரிவித்தார்.