டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து பாஜகவின் எச்.ராஜா ட்விட்டரில் கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம் என்று கூறியிருந்தார்.
நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு!
— சீமான் (@SeemanOfficial) February 26, 2020
இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?! pic.twitter.com/EM6g1R8gDB
இந்த நிலையில், பாஜகவின் எச்.ராஜா கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். சனநாயக வழியிலான அமைதியான அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள். கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும் வேலோடும் முன் தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள்! நினைத்ததையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல; தமிழ்நாடு!
எங்களது பெருந்தன்மையும் பொறுமையும்தான் உங்களது இருப்பை நிலை கொள்ளச் செய்திருக்கிறது! இங்கிருக்கும் இசுலாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல; காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடிகள்! எங்கள் உடபிறந்தவர்கள்! எங்களது இரத்த உறவுகள்! இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை; தமிழர்கள் நாங்கள்தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம். அவர்களைத் தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ள வேண்டும்; எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்! கவனம்! நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு! இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?!" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.