2021 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சராக்குவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், அமமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் விருப்ப மனுவை அக்கட்சியினர் அளித்து வருகின்றனர்.
அமமுகவின் முதல் விருப்ப மனுவை முன்னாள் அமைச்சர் பழனியப்பன், 'டிடிவி தினகரன் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட வேண்டும்' என அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாப்பிரெட்டிப்பட்டியில் டிடிவி தினகரன் போட்டியிட விரும்புகிறோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போது 15 பேர் இருக்கிறார்கள். அந்த 15 பேரும் அமமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்தார்.
டிடிவி தினகரன் இரண்டு தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர். அதில், ஒன்று ஆர்.கே.நகர் மற்றொன்று தேனி மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டியில் தினகரன் போட்டியிட விருப்ப மனு அளித்திருக்கிறார்.