நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது.
சென்னை, திருவள்ளூர், திருச்சி, இராமநாதபுரம், கரூர், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளையும் திமுக முழுவதுமாக கைப்பற்றியது. அதேபோல், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளையும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் கைப்பற்றியது. ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியும், இரண்டு தொகுதிகளை அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியும் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு தொகுதிகள் உள்ளன. இதில், பத்மநாபபுரம் தொகுதியை திமுகவும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய மூன்று தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியை அதிமுகவும், நாகர்கோவில் தொகுதியை பாஜகவும் கைப்பற்றியுள்ளது.
இதில், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தளவாய் சுந்தரமும், திமுக சார்பில் ஆஸ்டினும் போட்டியிட்டனர். இதில், அதிமுக தளவாய் சுந்தரம் 1,09,745 வாக்குகளைப் பெற்றார். திமுக ஆஸ்டின் 93,532 வாக்குகளைப் பெற்றார். இறுதியில் தளவாய் சுந்தரம், 16,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாத நிலையில், தற்போது அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும், அதில் அதிமுக வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.