Skip to main content

ஈரோடு தி.மு.க மாநாடு - 50 தீர்மானங்கள்!

Published on 25/03/2018 | Edited on 26/03/2018

 

erode dmk

 

ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று மாநாட்டின் 2-வது நாள் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள். 


இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 50 தீர்மானங்கள்!

 

தீர்மானம் : 1

மத்திய பாஜக அரசின் மதவாதம் மற்றும்

மொழித்திணிப்பைத் தடுத்து நிறுத்துவோம்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் “வளர்ச்சி” “ஊழல் ஒழிப்பு” “கருப்புப் பணமீட்பு” என்ற பொய்யான உறுதிமொழிகளை முன் வைத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிப்  பொறுப்பு ஏற்றதிலிருந்து அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான “பன்முகத்தன்மைக்கும்” “ஜனநாயகத்திற்கும்” “மதச்சார்பற்ற தன்மைக்கும்” “கூட்டுறவு கூட்டாட்சிக்கும்” விரோதமான  செயல்களில் ஈடுபட்டு நாட்டைப் பிளவுபடுத்தும் மதவாதப் பாதையில் அழைத்துச் சென்று தங்கள் “ஆட்சியின் தோல்வியை” மறைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க விபரீத விளையாட்டுகளையும் மீண்டும் கவர்ச்சிகரமான பொய்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டை மத ரீதியாகவும் மொழிவெறி அடிப்படையிலும் பிரித்தாள முனைப்புடன் செயல்படும் பா.ஜ.க.விற்கும், அதன் ஆதரவோடு இயங்கிவரும் இந்துத்துவா சங்பரிவார அமைப்புகளுக்கும் இந்த மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மதவெறி சித்தாந்தங்களுக்கு எதிரான பகுத்தறிவுச் சிந்தனைகளைப் புறக்கணிப்பது, அத்தகைய சிந்தனையாளர்கள் இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வது, சுதந்திரச் சிந்தனையாளர்களான, எம். எம். கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் கொலை செய்வது உள்ளிட்ட அக்கிரமமும் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் நடந்தேறியுள்ளது.

சுதந்திரமாக இயங்க வேண்டிய அரசியல் சட்ட அமைப்புகளை எல்லாம் சர்வாதிகார அடிப்படையில் தங்களின் கைப்பாவைகளாக மாற்றி, தங்களுக்கு எதிராக எழும் ஊழல் புகார்களையும் எதிர்க்கட்சிகளை நசுக்க எடுக்கும் முயற்சிகளையும் மறைத்து, பிரதமர் உள்ளிட்ட பொது ஊழியர்களின் மீது எழும் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட “லோக்பால்” அமைப்பையும் ஏற்படுத்தாமல், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எதேச்சாதிகாரமாகச் செயல்படுவதால் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. பாட்டாளிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உற்ற தோழனாகக் கருதப்படும் லெனின் சிலையை திரிபுரா தேர்தல் வெற்றிக் களியாட்டத்தில், புல்டோசர் வைத்து இடித்ததோடு நில்லாமல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையையும் உடைப்போம் என தங்களது வெறுப்பு அரசியல் நஞ்சை தமிழகத்திலும் பாய்ச்சிட பா.ஜ.க.வும் அதன் கூட்டாளிகளான இந்துத்துவா அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவது நாட்டின் இறையாண்மைக்கே விடப்பட்டுள்ள சவால் என்று   இந்த மாநாடு உணருகிறது. அதில் ஒரு அங்கமாகவே ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் மதிக்காமல், நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, அந்த ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அதிமுக அரசும் அனுமதி அளித்து பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு உரமூட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது. சகோதரத்துவத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் பல்வேறு மதத்தினரும் வாழும் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளுக்கு உதவி செய்யும் மத்திய- மாநில அரசுகளுக்கு இந்த மாநாடு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் புகட்டிய மண் -  தலைவர் கலைஞர் பண்படுத்திய மண் என்பதால், மதவெறி - மொழித் திணிப்பு போன்றவை எந்த விதத்தில், எந்த வடிவத்தில் தமிழகத்திற்குள் நுழைந்தாலும் அதை ஜனநாயக முறையில் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தயங்காது என்றும், நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை அம்சங்களை நிலைநாட்ட தி.மு.க. உறுதியுடன் போராடும் என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது..

 

தீர்மானம் : 2

பெரியார்சிலை சேதத்திற்கு அதிமுக அரசே முழுப்பொறுப்பு!

“தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம்” என்ற எச்.ராஜா போன்ற பா.ஜ.க.வினரின் பேச்சுக்களால் தூண்டப்பட்டு திருப்பத்தூரிலும், புதுக்கோட்டையிலும் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு இந்த மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையெடுத்து சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடு, தன்னை வருத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் தனது 95 வயது வரையிலும் சுற்றி வந்து, ‘மனிதனுக்கு மனிதன் சமம்’ என்ற ஒன்றைச் சிந்தனையை உருவாக்க, தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுப் பண்படுத்திய மண்ணில், அவர் சிலையை உடைக்கவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் உதவாக்கரை அ.தி.மு.க அரசு “குற்றவாளியை 12 மணி நேரத்தில் பிடித்து விட்டோம்” என்று கண் துடைப்பு நாடகத்தை நடத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் மண்ணில் அவரது சிலையைப் பாதுகாக்க முடியாத கையாலாகாத ஆளும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவது வெட்கக்கேடாக இருக்கிறது. மதவெறி பா.ஜ.க.விற்கு சாமரம் வீசவும் - ஊழல் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு பதவிச் சுகத்தை அனுபவிக்கவும் -  பெரியார் சிலையை உடைப்பதை தூண்டும் பா.ஜ.க.வினர் மீதும், அதன் துணை அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாமல் முக்கித் திணறிக்கொண்டிருக்கிறது ஆளும் அ.தி.மு.க அரசு. குறிப்பாக, ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழையும் தினத்தில் சகோதரத்துவம் தவழும் தமிழ் மண்ணில் பெரியார் சிலையை உடைத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை “இந்துத்துவா” அடிப்படையில் பிளவு படுத்தும் பா.ஜ.க.வின் வஞ்சக முயற்சிக்கு அதிமுக அரசு துணை போவதை இந்த மாநாடு மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் மீது கை வைப்பவரை, குண்டர் சட்டத்தில் அடைத்து, தமிழ் மண் ‘மத வெறியையும், வர்ணாசிரம இழிவுகளையும் விரும்பாத மண்’ என்பதை  நிலைநாட்ட வேண்டும் என்றும்;  இனி பெரியார் சிலை தமிழகத்தில் உடைக்கப்பட்டால் அதற்கு அ.தி.மு.க அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்த மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

தீர்மானம் : 3

மாநில சுயாட்சி

       பேரறிஞர் அண்ணா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக, 
1969 - ஆம் ஆண்டில் நீதிபதி இராசமன்னார் தலைமையில் நீதிபதி சந்திரா ரெட்டி, டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவைத் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அமைத்தது. மீண்டும், 2000-ஆம் ஆண்டு நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அதன் தொடர்ச்சியாக 2004-ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த போது, மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டுமென்று தி.மு.க வலியுறுத்தியதன் காரணமாக, 2007-இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகளைச் சீரமைப்பதற்காக நீதிபதி எம்.எம்.பூஞ்சி தலைமையில் மத்திய அரசு ஓர் ஆணையத்தை நியமித்தது. அப்போது திராவிட முன்னேற்றக் கழக அரசு வல்லுநர் குழு அமைத்து, அவ்வாணையத்திற்கு உரிய பதில்களையும், பரிந்துரைகளையும் அனுப்பியது.

       “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒருமைத்துவக் குறிக்கோளோடு”, “எல்லா உரிமைகளும் மைய அரசுக்கே” என்று ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொள்ளும் பா.ஜ.க.வின் கையில் மத்திய அரசு இயங்கும் இன்றைய சூழலில் தி.மு.கழகம் நீண்டகாலமாய்த் தொடர்ந்து வலியுறுத்திவரும் மாநில சுயாட்சிக் கோரிக்கை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை இந்த முழக்கத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மற்ற மாநிலங்களும்கூட மாநில உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ளக் குரல் கொடுத்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்திலோ காவிரி மேலாண்மை வாரியம், ‘நீட்’ தேர்வு, சல்லிக்கட்டு, நவோதயா பள்ளி, சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, மாநில அரசுப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்தல் என்று பல முனைகளிலும் மாநில உரிமைப்பறிப்பு அப்பட்டமாக நடந்தாலும், மாநில உரிமைகளைப் பறிகொடுத்து வாய்மூடி மௌனியாய் தமிழகத்தின் குதிரைபேர அடிமை ஆட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படும் இந்த நிலையை தி.மு.கழகம், மிகுந்த வேதனையோடும் கொந்தளிப்போடும் இம்மாநாட்டின் மூலம் கண்டிக்கிறது. எனவே, அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில், மாநில உரிமைகளைக் காக்க மாநில அரசு தனது மெத்தனப் போக்கை கைவிட்டு, மாநில உரிமைகளை மீட்டெடுத்துப் பாதுகாக்க முனைப்போடு செயல்பட வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில சுயாட்சி மற்றும் மாநில உறவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நான்கு குழுக்களின் பரிந்துரைகளையும் முழுமையான விவாதங்களுக்கு உட்படுத்தி மாநிலங்கள் அதிக அதிகாரம் பெறுவதற்கும், அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கமான “கூட்டுறவு கூட்டாட்சித்” தத்துவம்  நிலைத்து  நீடித்து,  மத்திய - மாநில  அரசுகளுக்கு   இடையிலான   உறவுகள் இணக்கமான சூழலில் சிறப்பான வகையில் மேம்படவும் மத்திய அரசு முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது..

 

தீர்மானம் : 4

தமிழக மாணவர்களுக்கு “நீட்” தேர்விலிருந்து விலக்கு

       மருத்துவப் படிப்பிற்கு “நீட்” நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்வதை கழகம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் கடுமையாக எதிர்த்து வருவதும், இன்றைய மத்திய பா.ஜ.க. அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை உதாசீனப்படுத்தி வருவதும், அ.தி.மு.க அரசும் தேவையான அழுத்தம் தராமல் மாணவர்களைக் கைவிட்டதும் அனைவரும் அறிந்தவை.

       2016-17ல், +2 அடிப்படையில், நீட் தேர்வு இல்லாத போது மருத்துவத் தேர்வு பெற்ற தமிழக மாணவர்கள் 3546 என்பது, 2017-18ல் நீட் அடிப்படையில் மாநிலத் திட்டப்படி தேர்வு பெற்ற தமிழக மாணவர்கள் வெறும் 2314 பேர் அதாவது 1232 பேர் குறைவாகத் தேர்வாகியுள்ளனர். ஆனால் அதற்கு மாறாக சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படித்து நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கை 62 லிருந்து 1220 ஆக அதாவது 1158 இடங்கள் அதிகமாகப் பெற்றுள்ளனர். மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுபவர் எண்ணிக்கை 9 லட்சம். அதாவது 98.5 சதவிகிதம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுபவர் சுமார் 14000 பேர் அதாவது 1.5 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல்  2016-17-ல் நீட் இல்லாதபோது, தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 1781 ஆக இருந்து 2017-18 -ல் நீட் அடிப்படையில் 1501 எனச் சுருங்கி, 280 இடங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 233 இடங்கள் குறைவாகி யுள்ளன. 2016-2017-ல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் +2 எழுதியவர்களுக்கு 30 இடங்கள் கிடைத்திருந்த நிலையில், 2017-18ல் அது வெறும் 5 பேர் என்ற அளவிற்குக் குறைந்து போனது. ஆக எல்லாவகையிலும், தமிழக மாணவர்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சமூகநீதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.

       இந்நிலையில் 2018-19ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்புகள் வெளிவந்து விட்டன.  மத்திய இணை அமைச்சர் இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலப்பாடத்திட்டத்தின் படி இருக்கும் என்று 18.01.2018-ல் கூறியிருந்ததற்கு மாறாக, 21.01.2018 நாளிட்ட செய்திக் குறிப்பில் இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் சி.பி.எஸ்.சி பாடத்திட்ட அடிப்படையிலேயே இருக்கும் என்று அறிவித்திருப்பது ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மாணவர்களைப் பழிவாங்கும் மத்திய அரசின் ஏதேச்சதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. கடந்த 2017 பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்காக 50 சதவீதம் இட ஒதுக்கீடு பாதுக்காக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகச் சட்டம் நிறைவேற்றி, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்படி அனுப்பி வைக்கப்பட்ட சட்டப்பேரவையின் இரண்டு சட்ட முன்வடிவுகளை எந்தக் காரணமும் இன்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் மத்திய அரசு தனது கடமையிலிருந்து நழுவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 11.8.2017 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த தமிழக முதலமைச்சர், இதைக் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தவில்லை. மாநில அ.தி.மு.க அரசும் மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, தமிழக மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலிலேயே சட்டங்களாக்க வேண்டு மெனவும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

       பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து வரலாற்றுச் சாதனை படைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஆகவே நீட் மட்டுமல்லாது, மாவட்ட நீதிபதிகள் தேர்வு உள்ளிட்ட  எல்லா வகையான நுழைவுத் தேர்வுகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை. பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள், மாணவர் சேர்க்கை முதலியன மாநில அரசுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. அவசரநிலை காலத்தில் மைய அரசால் பறிக்கப்பட்ட மாநில அரசின் கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

       9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்திருந்தால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்றும்; தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் மட்டும் தான் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்க முடியும் என்றும் அரசாணைகள் வெளியிட வேண்டுமென்று மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது..

 

தீர்மானம் : 5

காவிரி மேலாண்மை வாரியம்

       16.2.2018 அன்று வெளியிடப்பட்ட உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மைவாரியத்தையும் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் ஆறு வாரகாலத்திற்குள் மத்திய அரசு அமைத்து அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டுமென 15.3.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கனவே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் மத்திய அரசு அவற்றை அமைப்பதற்கான முனைப்பு காட்டாமல் உள்நோக்கத்துடன் தாமதப்படுத்திக் கொண்டு இருப்பதோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகவே மத்திய நீர் வளத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசி வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. முதன் முதலில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பிறகு 2.6.1990-ல் நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை நடுவர் மன்றத்திற்குப் பெற்றது, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு பெற்றது, அதன்படி நதிநீர் ஆணையம் அமைத்தது, 5.2.2007-ல் இறுதித் தீர்ப்பு பெற்றது என்று தலைவர் கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் நிகழ்த்திய காவிரி நதிநீர்ச் சாதனைகளை அதிமுக அரசு பொறாமை உணர்வுடன் கொச்சைப்படுத்தி வருவதற்கு இந்த மாநாடு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. 19.2.2013-ல் அரசிதழில் காவிரித் தீர்ப்பு வெளியிட்ட பிறகும், உச்சநீதிமன்றம் மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகும் அதிமுக அரசு, மெத்தனமாக இருந்து விட்டது. ஆகவே தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்றும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான கழகச் செயல் தலைவர் தளபதி அவர்கள் தி.மு.க. சார்பில் அறிவித்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட ரத்து செய்து விட்டு,  அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 22.2.2018 அன்று பங்கேற்று காவிரிப் பிரச்சினையில் தமிழக நலன் காக்க ஆளுங்கட்சிக்கு அளித்துள்ள முழு ஒத்துழைப்பைப் பயன்படுத்தி மாநில அரசு தனது தயக்க நிலையைத் தவிர்த்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்திட மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தை தர வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமிழக நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 6

சரக்கு மற்றும் சேவை வரி

       மிக அதிக அளவில் சிறு, குறு, மற்றும் நடுத்தர முதலீடு செய்யும் சுய தொழில் முனைவோர் மிகுதியாக உள்ள பகுதியான இந்த மண்டலம் ஏற்கனவே, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ழுளுகூ) விகிதங்கள் நிர்ணயிப்பதிலும் பல குளறுபடிகள் செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் ஏற்க மறுத்து, அவசரகதியில் நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் வியாபாரிகளும் சிறு தொழில் முனைவோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சட்டத்தால் 9 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று முதலில் தீவிரமாக எதிர்த்த அதிமுக அரசு இப்போது இந்த சட்டத்தால் மாநிலத்திற்கு நல்ல பலன் கிட்டியிருக்கிறது என்று ‘பல்டி’ அடித்திருப்பதற்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, மத்திய அரசு உடனடியாக பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசி, தேவையான மாற்றங்களைச் செய்து குழப்பங்களைத் தவிர்த்தும், அதிகமான வரி விகிதங்களைக் குறைத்து எளிமைப்படுத்தியும், மக்களின் துன்பத்தைப் போக்க ஆவன செய்ய வேண்டுமென்றும், மாநில அரசு அதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தர வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது..

 

தீர்மானம் : 7

உள்ளாட்சித் தேர்தல்கள்

       தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளின்றி உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயக வறட்சியால் தேக்க நிலையில் உள்ளன.   தோல்வி பயத்தால், இன்றைய அ.தி.மு.க அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் குழப்பங்கள் செய்து, தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்த்து வருகிறது. உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை திட்டமிட்டு மீறி வருவது மட்டுமின்றி, வார்டு மறு சீரமைப்பு என்ற பெயரில் பல்வேறு குழப்பங்களைச் செய்து வருவதற்கு இந்த மாநாடு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 24.10.2016 லிருந்து உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம் தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதற்கும் உரிய உடனடித் தீர்வு காண முடியவில்லை என்பது மட்டுமின்றி,  “பஞ்சாயத்துராஜ்” சட்டத்தின் அடிப்படை நோக்கமே சீர்குலைக்கப்பட்டுள்ளது.

எனவே, சிறந்த உள்ளாட்சியே நல்லாட்சிக்கு வழிவகுத்து அடிப்படை ஜனநாயகத்தை வளர்க்கும் என்பதை உணர்ந்து, குளறுபடிகளைத் தவிர்த்து, உள்ளாட்சித் தேர்தல்களை முறைப்படுத்தி, மேலும் காலதாமதம் ஏற்படாமல் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது..

 

தீர்மானம் : 8

உள்ளாட்சி அமைப்புகளின் வரி உயர்வை

மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், தனி அலுவலர்கள்  பதவி  வகித்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் வீட்டுவரி உயர்வு மிகக் கடுமையான அளவில் பலமடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஒரு சிலருக்கு 13 அரையாண்டுகள் கணக்கிட்டு (6-1/2 ஆண்டுகளுக்கு) கண்மூடித்தனமான வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்துவதற்கான காரணமோ, விளக்கம் கோரும் முன்அறிவிப்போ எதுவும் வழங்காமல் தன்னிச்சையாக, வரி உயர்வை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நடுத்தர, ஏழை மக்களின் வாழ்வைப் பெரிதும் பாதிக்கும் வகையில் உள்ளது.  எனவே, மாநில அரசு உடனடியாக இந்தக் கொடுங்கோல் முயற்சியைக் கைவிட வேண்டும்.

மேலும் குப்பை வரியாக ஆண்டுக்கு ரூ.120/- முதல் ரூ.600/- வரை வசூல் செய்யப்படுகின்றது.  அரசின் மூலம் பிறப்பு,  இறப்புச் சான்றிதழ் பெறும் போது பதிவுக் கட்டணமாக ரூ.100/-ம், ஒவ்வொரு பிரதிக்கும் ரூ.200/-ம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருதலைப்பட்சமான இவ்வாறான வரி மற்றும் கட்டண உயர்வுகள் மக்களை மிகவும் பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மாநில அரசு மேற்குறிப்பிட்ட வரிகளைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 9

டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக

மாற்றம் செய்வதை ரத்து செய்க!

ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டம், கடலூர், நாகப்பட்டினம் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டம் என்று நெல் விளையும் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கி வயிற்றில் அடிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, தரங்கம்பாடி மற்றும் சீர்காழி வட்டங்களில் உள்ள தரங்கம்பாடி, சின்னங்குடி, பூம்புகார், பெருந்தோட்டம், கீழமூவர்க்கரை, திருமுல்லைவாசல், வேட்டங்குடி, கொள்ளிடம், திருமயிலாடி, பழையபாளையம் ஆகிய ஊர்களை பெட்ரோலிய மண்டலப் பகுதி என்று அறிவித்திருப்பதை ரத்து செய்து, காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கை முறையைக் காப்பாற்றிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 10

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு

       பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்சிசுக் கொலைகள்,            இளந்தளிர் பாலியல் வன்முறைகள், ஆணவக்கொலைகள், காதல் சம்பந்தப்பட்ட ஆணாதிக்கக்கொலைகள், வரதட்சணை உள்ளிட்ட குடும்ப வன்முறைகள், பணியாற்றும்  இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் என்று  பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறைகளும் பெருகிக் கொண்டே வருகின்றன.   2016ல் மட்டும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக  நாடு முழுவதும் நடந்துள்ளன. வரதட்சணைக் கொடுமையால் தினமும் 22 பெண்கள் இறந்து போகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவற்றைத் தடுக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்கள் போதுமானதாக இல்லை;, நடைமுறைப்படுத்தலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஏற்கனவே திராவிட முன்னேற்றக்கழகம் குடும்ப வன்முறையைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், Help Line உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்தத் தருணத்தில் பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையில் பெண்கள் வெறும் 11.3 சதவீதம் மட்டுமே என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது.  ஆகவே நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்திட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக்கழகம் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை, அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்கின்ற நிலையிலும், 9.3.2010 அன்றே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும் சட்டமாக்க முடியாத நிலை நீடிக்கிறது என்பதை தி.மு.கழகம் மிகுந்த வருத்தத்தோடும் வேதனையோடும் நோக்குகிறது. எனவே, “நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களுக்கு 50 சதவீத பங்கு இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசி வருவது உளப்பூர்வமான உண்மையென்றால், மக்களவையில் பா.ஜ.க.விற்குள்ள பலத்தைப் பயன்படுத்தி, அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து,  உடனடியாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றி, மகளிர் இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 11

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் பறிபோகும் அவலம்

சமீபத்தில் இந்தியாவில் புதிதாக வேலை தேடி வருவோர் தொடர்பாக நடைபெற்ற ஒரு ஆய்வின் அடிப்படையில் அடுத்த 7 ஆண்டுகளில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 48 கோடியிலிருந்து 58 கோடியாக உயரும். அதாவது கூடுதலாகப் பத்து கோடி தொழிலாளர்கள் வேலை தேடி வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. ஆண்டொன்றுக்கு ஒரு கோடி தொழிலாளர்கள் புதிதாக வேலைக்காக காத்திருப்போர் பட்டியலில் சேரக்கூடிய அபாய நிலை ஏற்படும். இது பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையற்று செயல்படுகிறது மத்திய பா.ஜ.க.அரசு.

பண்டித நேரு போன்ற மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை அழிப்பதையே பா.ஜ.க. அரசு குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகிறது.  பாதுகாப்புத் துறையையும் தனியாருக்கு தாரைவார்த்து இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. புதிய வேலைவாய்ப்பை உருவாக்காமல், அரசு மற்றும் பொதுத் துறைகளில் ஏற்கனவே உள்ள வேலை இடங்களை ரத்து செய்து வருகிறது. வேலைக்கு ஆட்கள் நியமனம் செய்வதைத் தடை செய்துள்ளது இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்களிக்கும் விவசாயம், கைத்தறி போன்ற தொழில்களைச் சீரழிக்கும் வகையில், அவர்களுக்கான உற்பத்திச் செலவைக் குறைக்க வழி தேடாமலும், உற்பத்திக்குக் கட்டுப்படியான விலையை வழங்க முன்வராமலும், பின்னடைவு முயற்சியில் ஈடுபட்டுள்ள மோடி அரசை எதிர்த்துப் போராடும் பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் ஆதரவளித்துத் துணை நிற்கும்.

 

தீர்மானம் : 12

பேருந்துக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்க!

மக்களுக்குத் தேவையான போக்குவரத்து சேவையளிக்கும் விதமாக முதன் முதலில் பேருந்துகளை நாட்டுடைமையாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள், 2006-2011 முதல் ஒரு பைசா கூட போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி செய்தார். ஏற்கனவே பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி திணிப்பு முதலிய மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால், வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களை மேலும் துன்புறுத்தும் வகையில் 67 முதல் 108 சதவீதம் வரை பேருந்துக் கட்டணங்களை முன்னறிவிப்பின்றி பலமடங்கு உயர்த்தி 19.1.2018-ஆம் தேதி நள்ளிரவில் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்ற முறையில், மத்திய முன்னாள் அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள் தலைமையில் போக்குவரத்துக் கழகங்கள் சீரமைப்புகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து, அந்தக் குழு  11.2.2018 அன்று 27 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு அதை முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களே நேரில் சென்று ஒப்படைத்தும், இதுவரை போக்குவரத்துக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களைக் களையவோ, நிர்வாகக் குளறுபடிகளை நீக்கவோ அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழக மக்களின் பல வகையான போராட்டங்களுக்குச் செவிசாய்க்காமல், கண்துடைப்பிற்காக, உயர்த்தப்பட்ட கட்டணத்தில் மிகச் சிறுபகுதியை குறைத்திருந்தாலும் அது எந்த வகையிலும் மக்கள் துயர்துடைக்கச் சிறிதும் பயன்படவில்லை என்பதால், பேருந்துக் கட்டண உயர்வை முற்றிலுமாகத் திரும்பப் பெறவும், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தில் கரை புரண்டோடும் ஊழல்களைக் களைந்து, திராவிட முன்னேற்றக் கழகம் அளித்துள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இம்மாநாடு அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் : 13

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு

துரோகம் செய்யும் அரசுக்குக் கண்டனம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாடு அரசின் கொள்கையான குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையும், வருவாய் ஈட்டமுடியாத கிராமப்புற, நகர்ப்புற மற்றும் மலைப்பகுதி மக்கள் சேவைக்காக பேருந்துகளை இயக்கி வருகின்றது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நமது அண்டை மாநிலங்களை விட திறம்பட உழைத்தும், பழுதடைந்த பேருந்துகளைக் கொண்டு எரிபொருள் சிக்கனம் செய்தும் சேவை செய்து வருகிறார்கள். அந்த சேவையைப் பாராட்டி  சாலைப் போக்குவரத்துக் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ளது.   திறமையான சேவையாற்றிவரும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம்   ஊதியம், போனஸ் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதில் தொடர்ந்து துரோகம் இழைக்கப்படுகிறது.  போக்குவரத்துக் கழகத்தை விட அதிக அளவில் நட்டத்தில் இயங்கிவரும்  மின்வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், போன்ற தமிழ்நாடு அரசு நிறுவனங்களில் ஊதியம், போனஸ் இன்னும் பிற சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு நிர்வகித்து வரும் துறைகளுக்குள்ளாகவே பாகுபாடு ஏற்பட்டு, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும், மற்றொரு கண்ணுக்கு வெண்ணையும் வைப்பது போன்ற  நிலைமை உருவாகி வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது..

 

தீர்மானம் : 14

கெயில் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும்

பாதிப்பை உடனே தடுத்திடுக!

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் சுமார் 310 கி.மீ. நீளத்திற்கு 20 மீட்டர் அகலத்தில் குழாய்கள் பதிக்கும் இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். சுமார் 1,491 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழ மரங்கள் அழியும்.  சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு பறிபோகும். கெயில் குழாயில் கசிவு, வெடிப்பு ஏற்பட்டால், உயிர்ச்சேதம் உள்பட பேரழிவு ஏற்படும். விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் செல்வதால் அருகில் உள்ள மற்ற நிலங்களையும் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடும்.

இந்த நிலங்களில் உள்ள வீடுகள், கோழிப் பண்ணைகள், கிணறுகள்,  ஆழ்துளைக் கிணறுகள், குடிநீர்த் தொட்டிகள் நாசமாகிவிடும். கெயில் குழாய் பதிக்கப்படும் பகுதியில் உள்ள வீட்டு மனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பேராபத்து ஏற்படும். தென்னை விவசாயம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவிடும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளுடன்  சம்பந்தப்பட்ட இந்த நிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் கொண்டு செல்வதைத் தடுக்க அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை இந்த மாநாடு வேதனையுடன் பதிவு செய்கிறது. 25-3-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்திய எரிவாயுக் கழகம்  கேரளா மற்றும் கர்நாடகாவில்  விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் விவசாய நிலங்களைத் தவிர்த்து விட்டு, அரசுக்குச் சொந்தமான சாலையோரங்களில் குழாய்  பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  நிலையில், தமிழ்நாட்டில்  மட்டும் விவசாயிகளின் விளை நிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளது  விவசாயிகள் மத்தியில் பெரும் பாதிப்பையும்  அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில்,  சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை  ஓரங்களில் இப்பணியைத் தொடர இந்தச் செயற்குழு  வலியுறுத்துகிறது” என விடுத்திருந்த கோரிக்கையை இந்நேரத்தில் நினைவூட்டி, விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய- மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மண்டல மாநாடு கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் : 15

கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துக!

நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு முன்னோடியாகச் செயல்பட்டது கழக அரசுதான். தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை உருவாக்கி வரலாற்றுச்  சாதனை படைத்தார். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான அந்த  நதி நீர் இணைப்புத் திட்டங்களை கிடப்பில் போட்ட அதிமுக அரசு, புதிய நதி நீர் இணைப்புத் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல் மழைக் காலங்களில் கிடைக்கும் உபரி நீரைக் கூட சேமித்து வைக்கும் திறனின்றிவீணடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. ஆகவே கழக அரசின் முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும், தலைவர் கலைஞர் உருவாக்கிய தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் : 16

இடைவிடாது மக்களைச் சந்திப்போம் -

மக்கள் விரோத ஆட்சிக்கு விடை கொடுப்போம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் தொழில்துறை, பொருளாதாரத் துறை, நிர்வாகத்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கியது. ஆனால் இன்றைக்கு அதிமுக ஆட்சியில் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் என்று நிதி நிர்வாகம் முற்றிலும் சீரழிந்து “அறிவிக்கப்படாத நிதி நெருக்கடி” தமிழகத்தில் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ரவுடிகள் எல்லாம் ஒன்றுகூடி பிறந்த நாள் விழா கொண்டாடும் அளவிற்கு மாநிலத்தில் காவல்துறை நிர்வாகம் கெட்டுப்போய் விட்டது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை; வீட்டிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் கொலை, கொள்ளை, வழிப்பறி தமிழகத்தில் தினந்தோறும் நடக்கின்றன. புதிய தொழிற்சாலைகள் ஏதும் வரவில்லை. வர விரும்பிய தொழில் முதலீட்டாளர்களும் ஆட்சியாளர்களின் ஊழல்-கமிஷன் கெடுபிடியைப் பார்த்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் கட்டாயம் உருவாகி விட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்பதே மர்மமாக இருக்கிறது.புதிய குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களும் முடக்கப்பட்டு விட்டன. உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மத்திய பாஜக அரசின் காலடிகளில் சமர்ப்பித்து அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி.நிர்வாகம், நிதி மேலாண்மை ஒட்டு மொத்தமாகக் கெட்டுச் சீரழிந்து கடந்த ஏழு ஆண்டுகளாக அகில இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து நிற்கும் பேரவலத்திற்கு அதிமுக அரசேதான் காரணம் என்று இந்த மண்டல மாநாடு பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறது. இந்தக் கேடுகெட்ட மைனாரிடி ஆட்சியை விரட்டியடித்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட வேண்டிய ஜனநாயக - தார்மீகப்  பொறுப்பும் கடமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. ஆகவே “இடைவிடாமல் மக்களைச் சந்திப்போம். மக்கள் விரோத ஆட்சிக்கு விடை கொடுப்போம்” என்ற முழக்கத்துடன்,தமிழகத்தை இந்தப் புரையோடிப்போன - பொல்லாத அ.தி.மு.க. ஆட்சியிடமிருந்து மீட்க திராவிட முன்னேற்றக் கழகம்  சூளுரை மேற்கொள்வதென இம்மாநாடு தீர்மானிக்கிறது!

 

தீர்மானம் : 17

ஊழலை ஒழிக்க- லோக் ஆயுக்தாவை உடனே உருவாக்குக!

அதிமுக ஆட்சியில் நிர்வாகத்தின் ஒவ்வொரு துறையும் ஊழலின் ஊற்றுக்கண்களாக மாறி விட்டன. குட்கா ஊழல், கிரானைட்  ஊழல், மணல் ஊழல், கார்னட் மணல் ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல், டெண்டர் ஊழல்கள், முட்டை கொள்முதலில் ஊழல், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல், காவல்துறைக்கு வாக்கி டாக்கி கொள்முதலில் ஊழல், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு நியமனத்தில்  ஊழல், மின்வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் நியமன ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், சூரிய ஒளி மின்சார கொள்முதல் ஊழல், பேருந்துகள் வாங்குவதில் ஊழல், சாலைப் பணிகளுக்கான டெண்டர்களில் ஊழல் என்று எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல் ஊழலைத்தவிர வேறேதும்இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஊழலின் உருவகமாக அதிமுக ஆட்சி காட்சியளிக்கிறது. ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையும் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது. லோக் அயுக்தா அமைப்பும் உருவாக்காமல் தொங்கலில் நிற்கிறது. ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷன் போதாது, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே விசாரணைக் கமிஷன் நியமிக்க வேண்டும் என்பது போல் ஊழல் குப்பையின் துர்நாற்றம் இந்த அரசில் மக்களை மயக்கமுறச் செய்துகொண்டிருக்கிறது. ஆகவே மேலும் தாமதப்படுத்தாமல்,உடனடியாக லோக் அயுக்தா அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என்று இந்த மண்டல மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 18

இ-வே பில் (E-Way Bill) உச்சவரம்பை உயர்த்த வேண்டும்

       ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வகை செய்யும் இணைய வழியிலான சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஒப்புகை ரசீது (E-Way Bill) தற்போது பத்து கிலோ மீட்டர் வரையிலும் மற்றும்  பொருட்களின் மதிப்பு ரூ.50,000 வரையிலுமே அனுமதிக்கப்படுகிறது.  இது சிறு, குறு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

எனவே, தற்போது உள்ள உச்ச வரம்பைத் தளர்த்தி சிறு, குறு நிறுவனங்களுக்கு ஓரளவு சலுகை வழங்கும் வகையில், தற்போதுள்ள உச்சவரம்பை 50 கிலோ மீட்டர் வரையில் என்றும்;  பொருட்களின் மதிப்பு ரூ. 5 இலட்சம் வரையில் என்றும் உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் : 19

கடலோர ஆறுகளில் தடுப்பணைகள்

       நாகை மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் 100 சதவீதம் உப்புத் தண்ணீராகவும், தஞ்சை டெல்டாவின் பல பகுதிகள் சேறு கலந்த தண்ணீராகவும் உள்ளது. டெல்டா மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம், காவேரி, உப்பனாறு போன்ற ஆறுகளில் கடல் நீர் 25 கி.மீ தூரம் வரை கடலைவிட்டு நிலப்பகுதிக்கு உள்ளே புகுந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மற்றும் நிலவளம் பாதிப்பிற்குள்ளாகி மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த இடங்களில் தடுப்பணைகள் கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் : 20

பாண்டியாறு புன்னம்புழா திட்டம்

       நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியிலுள்ள பல சிற்றாறுகளின் நீரை சிறு அணைகள் அமைத்து பவானி சாகர் அணையை நோக்கிப் பாயும் மேயாறுக்குத் திருப்பி விடும் திட்டம்தான் பாண்டியாறு புன்னம்புழா திட்டமாகும். 1968-ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில், தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதும், பிறகு மீண்டும் 1998-ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும் இத்திட்டத்தை  நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சூழல் காரணங்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு அன்றைய சூழலில் நிறைவேற்ற இயலாமல் போனது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இத்திட்டத்தை மாற்றியமைத்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் தமிழக எல்லைக்குள்ளேயே மேயாற்றிற்குத் திருப்பி விட்டு, தற்போது செயல்படுத்த முடியும். இத்திட்டத்தை, கடந்த 2016 தேர்தல் வாக்குறுதியாக தி.மு.கழகம் அறிவித்திருந்தது. கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய பாசனத் திட்டங்களில் ஒன்று கீழ்பவானி பாசனத் திட்டம் (LBP). இன்றைய சூழலில் மிகவும் தேவையான இத்திட்டத்தை உடனே நிறைவேற்றத் தக்க நடவடிக்கைகள் அனைத்தையும் முன்னெடுக்க மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

 

 

தீர்மானம் : 21

பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்திட்டம்

       பரம்பிக்குளம், ஆழியாறு திட்டத்தில் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலை ஆறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு கேரள அரசுடன் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். கேரளம் பேச்சு வார்த்தைக்கு ஒத்துவரவில்லையென்றால், 1958-ஆம் ஆண்டு தமிழக கேரள மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட நீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தின் பிரிவுப்படி நடுவர் மன்றம் அமைத்துத் தீர்வு காண வேண்டும்.

       மேற்படி ஒப்பந்தத்தில் கண்டுள்ள ஆனைமலையாறு திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 2.5 டி.எம்.சி தண்ணீர் தற்போது கேரளத்திற்குத் தான் சென்று கொண்டு இருக்கிறது. ஒப்பந்தத்தின் பிரிவுப்படி, கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டிய பிறகு ஒரு துணை ஒப்பந்தம் மேற்கொண்டு ஆனைமலையாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிக் கொள்ள கேரளா அரசு சம்மதிக்க வேண்டும். இடைமலையாறு அணையைக் கேரள அரசு கட்டி முடித்து கிட்டதட்ட நாற்பதாண்டுகள் ஆகியும், இன்னும் திட்டம் நிறைவேறவில்லை என்று உண்மைக்கு மாறாகக் கேரளா கூறி வருகிறது. இடைமலையாறு திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று கேரள அரசின் இணையதளத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், கேரள அரசு ஆனைமலைத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அதற்கு மறுக்கும் பட்சத்தில் ஒப்பந்தப்படி சோலையாறிலிருந்து கேரளத்திற்குக் கொடுக்கும்  தண்ணீரில் 2.5 டி.எம்.சி குறைத்துக் கொடுக்க வேண்டும்.

       மேலும் கேரள அரசு இடைமலையாறு திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக அதன் இணையதளத்திலேயே பதிவு செய்து அறிவித்து விட்டதால், ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதிக்குள் மேல் நீராறில் இருந்து கேரளத்திற்கு தமிழகம் கொடுக்கும் சுமார் 1.5 டி.எம்.சி தண்ணீரை தமிழகமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

       கோவை திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளக்கோவில் வரை செல்லும் பரம்பிக்குளம் பிரதான கால்வாய் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால் ‘காண்ட்டூர்’ கால்வாயை தி.மு.க ஆட்சியில் செப்பனிட்டது போல அ.தி.மு.க. அரசு ‘கான்கீரிட்’ தளம் அமைத்துத் தர வேண்டும்.

       கோவை திருமூர்த்தி அணை முதல் மண்டலப் பாசனத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் வழங்க அரசு ஆணையிட்டு, முதல் சுற்று தண்ணீர் முடிவடையும் நிலையில் இரண்டாம் சுற்றுக்கு பரம்பிக்குளத்திலிருந்து ‘காண்ட்டூர்’ கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு வந்து கொண்டு இருந்த தண்ணீரை ஆழியாறு அணைக்கு திருப்பிவிட்டு கேரளத்திற்கு வழங்கி உள்ளதால் முதல் மண்டலப்பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இரண்டு சுற்று தண்ணீர் கிடைக்கும் என்று அரசு ஆணையில் கூறப்பட்டு இருந்ததால் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு தற்போது காய்ந்து கொண்டுள்ளன. அதனால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு விவசாயிகளுக்கு தற்போது இரண்டு சுற்று தண்ணீர் வழங்க அரசு சம்மதித்துள்ளது. ஆனாலும் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள இழப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், சிறுவாணி அணைத் தண்ணீரை காரணம் காட்டி, பரம்பிக்குளம் தண்ணீரை கேரளத்திற்குத் திறந்து விட்ட தமிழக அரசை இம்மாநாடு கண்டிக்கிறது.

 

தீர்மானம் : 22

தனியார் சர்க்கரை ஆலைகள் முறைகேடு

       2013-2014 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச விலையை மட்டுமே ஆலைகள் வழங்கின.

       ஆனால் மாநில அரசு பரிந்துரைத்த விலையை கடந்த நான்கு பருவங்களாக சர்க்கரை ஆலைகள் வழங்கிடவில்லை. இவ்வாறான நிலுவைத்தொகை 1,347 கோடி ஆகும். அதுமட்டுமல்லாமல் மாநில அரசு செய்த முறைகேட்டின் அடிப்படையில், தனியார் ஆலைகள் நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து நிலுவைத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.160 என்றும், சில ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.130 என்றும் விவசாயிகளின் எளிமையையும் அறியாமையையும் பயன்படுத்தி, ஏமாற்றிக் கையெழுத்துப் பெற்று, மொத்த நிலுவைத் தொகையையும் கொடுத்து வரவு செலவு முடித்து விட்டனர். இதற்கு மாநில அரசும் முறைகேடாக, சட்டத்திற்குப் புறம்பாக துணை போயுள்ளது. ஆகவே, மாநில அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, மேற்படி தனியார் ஆலைகளின்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை 1,347 கோடி ரூபாயையும் உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் தி.மு.கழகம் நீதிமன்றம் மூலம் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

 

 

 

 

தீர்மானம் : 23

குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்.

       150-க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளை உருவாக்கி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அந்த உழவர் சந்தைகளை மூடி விவசாயிகளின் தற்கொலைக்கு வித்திட்டது. தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தை இன்றைக்கு மத்திய அரசே ஏற்றுக் கொண்டு வரும் நிலையில், இங்குள்ள அதிமுக அரசு மாநிலம் முழுவதும் விவசாய விளைபொருட்களை, குறிப்பாக அழுகும் தன்மை கொண்ட பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை, அவை அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளைக் கருத்தில் கொண்டு, ஆங்காங்கே தக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைத்து வேளாண் பொருளாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்; தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் திறந்து உயிரூட்ட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 24

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்க

       கடந்த 2006-ம் ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றவுடன், வறட்சியால் பாதிக்கப்பட்டு பெரும்பாதிப்பிற்கு ஆட்பட்டு இருந்த விவசாயிகளின் நிலையைக் கருத்திற்கொண்டு, விவசாயக்கடன் முழுவதையும், சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தள்ளுபடி செய்து தலைவர் கலைஞர் அவர்கள் உத்திரவிட்டு விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றினார். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளாலும், வறட்சி, இடுபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களாலும் பாதிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். தற்கொலை செய்து கொண்டு  மாண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறக் கூட அதிமுக அமைச்சர்கள் செல்லவில்லை. விவசாயிகளின் வேதனையை உணர்ந்த மேன்மைதங்கிய உயர்நீதிமன்றமே விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும், அதிமுக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்று விவசாயிகளின் தலையில் பேரிடியை இறக்கியதற்கு இந்த மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது. விவசாயிகள் தங்களின் வேதனையைத் தெரிவிக்கும் பொருட்டு பிரதமரைச் சந்திக்க டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தியும் உதாசீனப்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இந்த மாநாடு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல்  எல்லா குறு - சிறு விவசாயிகளும் அனைத்து வங்கிகளிலும் வாங்கிய விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 25

தாராபுரம் ‘கட்’ பாசனத் திட்டம்

       கீழ்பவானி பாசனத் திட்டம், இரண்டு இலட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பாசனத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அன்றைய அரசு சில காரணங்களுக்காக அந்த பரப்பளவில், நிலத்தின் இடையிடையே சுமார் இருபத்தி இரண்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கான பாசனத்துக்குக் கால்வாய்கள் அமைக்காமல் தவிர்த்து விட்டது. இது தாராபுரம் ‘கட்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த அறுபது ஆண்டுகாலமாக, மேற்படி தவிர்க்கப்பட்ட இருபத்தி இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கும் கால்வாய்கள் அமைத்து பாசன வசதி செய்து தரவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, சென்ற சில ஆண்டுகளில் ஏற்கனவே பாசன வசதி பெற்று வந்த விவசாய நிலங்கள் நகரமயமாக்கல் காரணமாக குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. இதன் காரணமாக பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்ட நீர் பயன் படுத்தப்பட முடியவில்லை. ஏற்கனவே தவிர்க்கப்பட்ட இருபத்தி இரண்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென முன்னரே அரசாணை உள்ளது. இருப்பினும் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 26

அத்திக்கடவு - அவினாசித் திட்டம்

       பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காலங்களில் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டு கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள குளங்களில் நீர் நிரப்பி, அந்தப் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குப் பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள அத்திக்கடவு - அவினாசித் திட்டம் நீண்ட காலமாகச் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டம் பற்றி ஆய்வு மேற்கொள்ள தி.மு.க. ஆட்சியில் 2009-ஆம் ஆண்டு 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காவிரி தொழில்நுட்பக் குழுவின் முன்னாள் தலைவர் திரு அ. மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை 31.10.2009 அன்று தலைவர் கலைஞர் அவர்களிடம் அளிக்கப்பட்டு, இத்திட்டத்தை 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. 2011 தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இது வலியுறுத்தப்பட்டு, இதற்காகப் போராடிய மக்களை நேரடியாக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்ததை இந்த மாநாடு நினைவு கூர்கிறது.   ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக 2016 வரை மவுனமாக இருந்து விட்டு, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பக் கட்டப் பணிகள் என்று கூறி, 3.27 கோடி ரூபாய் அறிவித்து, இப்போது நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றப் போகிறோம் என்று சொன்னாலும், எல்லாம் வெற்று அறிவிப்பாகவே இருப்பது இந்தப் பகுதி மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே பகட்டு அறிவிப்புகளோடு நிற்காமல் “அத்திக்கடவு - அவினாசி” திட்டத்தை  போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 27

காவிரி உபரி நீர் - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம்

       சேலம் நாமக்கல் மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்கும் வகையிலும், விவசாயப் பாசனத்திற்கு ஏற்ற வகையிலும் காவிரி ஆற்றிலிருந்து வரும் உபரிநீரை மேட்டூர் - எடப்பாடி - சங்ககிரி சட்டமன்றத் தொகுதிகளின் வழியாக திருமணிமுத்தாறில் இணைத்து, திருச்செங்கோடு, நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளின் வழியாக மீண்டும் காவிரியாற்றில் இணைத்தால் இவ்வழித் தடங்களிலுள்ள குளம் குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் நீரை நிரப்பி, சுமார் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற ஏதுவாகும். இத்திட்டத்தின் மூலம் மேற்கூறிய பகுதிகளில் நிலத்தடி நீர் மேம்படும்போது, விவசாயமும் பாதுகாக்கப்படும். எனவே, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி, சேலம், நாமக்கல் மாவட்ட விசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 28

தென்னை மரத்திலிருந்து “நீரா பானம்” இறக்கிட அனுமதி.

       தென்னை மரத்திலிருந்து “நீரா பானம்” இறக்க தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

       தற்போது தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் மூலமாகத்தான் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் அனைவரும் ஆளும் அ.தி.மு.கவினர்.  அந்த நிர்வாகிகள் அவர்களின் கட்சிக்காரர்களையே நீரா பானம் இறக்க அனுமதி  பெற உதவுகிறார்கள். இதனால், பெரும்பாலான மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

       மேலும், எல்லா தென்னை மரங்களிலும் நீரா பானம் இறக்க முடியாது. போதிய தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மட்டுமே சாத்தியமாகும். தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் மேற்கண்ட நிறுவனங்களில் உறுப்பினர் ஆக இயலாத சூழ்நிலையில், அவர்களது நீரா பானம் இறக்குவற்கான உரிமையை இழந்து விடுகிறார்கள். எனவே, தமிழக அரசு நீரா பான அனுமதியில் நடுநிலையோடு நடந்து, விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது..

 

தீர்மானம் : 29

விவசாய  நிலங்களிலுள்ள உயர் அழுத்த மின் கோபுரங்களை புதைவழித்தடமாக மாற்றியமைக்க வேண்டும்.

      

தனியார் மயமாக்கப்படும் மின்சார உற்பத்தியும், மின் விநியோகமும் அதிவேகமாக விவசாய நிலங்கள் மற்றும் விளைச்சல் நிலங்களை அழித்து வருகின்றன.

       மேலும், இவ்வாறு (காற்றாலை, சூரிய ஒளி மற்றும் அனல் மின்) தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சந்தைப்படுத்த, தனியார் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று, அதிக விலை கொடுக்கும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, சட்டிஸ்கர் மற்றும் இதர மாநிலங்களுக்கும், தாராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து ஜார்கண்ட் வரையிலும் மின்சாரம் கொண்டு செல்ல விவசாயிகளின் எவ்வித ஒப்புதலுமின்றி விளை நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்தப் (6000 MW, 800 KVA, 750 KVA, 400 KVA, 330 KVA,  220 KVA, 110 KVA) பாதைகளாக சுமார் 30 வழித்தடங்கள் ஏற்படுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

       மின்சார உற்பத்தியும், மின்சார விநியோகமும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருப்பினும், விவசாய நிலங்களையும், விசாயிகளின் வாழ்வாதாரங்களையும், விவசாயத் தொழிலாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு மேற்கண்ட திட்டங்களையும், இனிவரும் மின்பாதைத் திட்டங்களையும், சாலை யோரங்களில் புதை வழித் தடங்களாக (கேபிள்களாக) மாற்றியமைக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

 

 

தீர்மானம் : 30

கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்துக

       கடந்த 2013 -ல் நடைபெற்ற கூட்டுறவு  சங்கத் தேர்தலை அ.தி.மு.க அரசு அடாவடித்தனமாக நடத்தியதால் தி.மு.கழகம் அந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, எதிர்ப்பின்றி அ.தி.மு.க.வினர் சங்கங்களின் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கேள்வி கேட்க ஆளில்லா நிலையில் அவர்கள் விருப்பப்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, சங்கங்களை பெருத்த நிதி நெருக்கடிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  விற்பனையாளர் முதல் அனைத்து ஊழியர்கள் நியமனத்திலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. ஆகவே அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து கூட்டுறவு சங்கங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. எதிர் வரும் கூட்டுறவுத் தேர்தலில் எந்தவித முறைகேடுகளும் நடக்காமல் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், உன்னதமான இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவுத் துறையைக் காப்பாற்ற வேண்டுமென்றும், அரசு அவ்வாறு செய்யத் தவறினால் தி.மு.கழகம் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் இம்மாநாடு எச்சரிக்கிறது.

 

தீர்மானம் : 31

கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றிடுக

தமிழகத்தில் 1.66 கோடி டன் கரும்பு உற்பத்தி செய்யும் திறனை தமிழக விவசாயிகள் பெற்றிருக்கிறார்கள். அந்த கரும்பைப் பெற்று அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்து தரக்கூடிய 42 பொதுத்துறை, கூட்டுறவுத் துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் 15 ஆலைகள் கரும்பு சக்கை மூலமாக 480 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் வலிமை உள்ளது. கரும்புக் கழிவு பொருளான மொலாசஸிலிருந்து எரிசாராயம் தயாரிக்கும் ஆலைகளும் மிகச் சிறப்பாகச் செயல்படும் நிலையில் உள்ளது. இச்சூழலில் இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி 66 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. இதன் அடிப்படையில் எந்த ஒரு சர்க்கரை ஆலையும் முழுமையாக இயங்க வாய்ப்பில்லை. பல சர்க்கரை ஆலைகள் மூடப் பட்டுள்ளன. பல சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கக் கூடிய நிலுவை பாக்கி 1500 கோடி ரூபாய்க்கு மேலாக வழங்காமல் உள்ளது. அரசு அறிவிக்கின்ற மாநில ஆதார விலையை (ரூ.550 டன் ஒன்றுக்கு), மத்திய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலை டன் ஒன்றுக்கு ரூ.2300 உடன் சேர்த்து, ரூபாய் 2850 வழங்கிட தனியார் ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக மறுத்து விட்டன. இதனால் கரும்புக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காமல் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. சர்க்கரை ஆலைகளும் இயங்கவில்லை. 17 லட்சம் டன் உற்பத்தி ஆக வேண்டிய சர்க்கரை, ஆறரை லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. தமிழகத்திற்குத் தேவையான சர்க்கரை சுமார் 18 லட்சம் டன்னாகும். உற்பத்தி ஆகும் ஆறரை லட்சம் டன் போக மீதம் உள்ள பதினொன்றரை லட்சம் டன் சர்க்கரையை வெளியில் இருந்து வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் சர்க்கரை வாங்கும் நோக்கில் பொதுமக்களின் பணம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் வெளிமாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் இறக்குமதி என்னும் பெயரால் சென்று விடும் நிலை உள்ளது.  இதனை உணராத தமிழக அரசு கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை மற்றும் இதன் தொடர்புடைய பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி அல்லல்படுவதைப் பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமல் இருந்து வருவதை இம்மாநில மாநாடு கண்டிப்பதோடு, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கிடவும், ஆலைகளில் உற்பத்தி ஆகும் அனைத்து சர்க்கரையையும் அரசே வாங்கவும், சர்க்கரை ஆலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தங்கு தடையின்றி அரசு வாங்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் : 32

கைத்தறித்  துணிகளுக்கு  ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு

       பேரறிஞர் அண்ணா அவர்களும், கழகத் தலைவர் கலைஞர் அவர்களும், கழகத்தவரும் கைத்தறிக்குச் சோதனைக் காலம் வந்தபோது, கைத்தறித் துணிகளை தங்கள் தோளில் சுமந்து விற்பனை செய்தனர். அதைக் கருத்தில் கொண்டு கழக ஆட்சியில் ஆண்டு முழுவதும் 20 சதவீதமும் மற்றும் விழாக் காலங்களில் கழிவு வழங்கி, தேங்கிய தைத்தறித் துணிகளை விற்பனை செய்தது, கைத்தறி நெசவாளர்களையும், கூட்டுறவு சங்கங்களையும் காப்பாற்றிட உதவியது. துணிகளை சந்தையில் போட்டிபோட்டு விற்க முடியாத இன்றைய சூழ்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி செய்யும், பட்டு உள்ளிட்ட கைத்தறித் துணிகளுக்கு இடுபொருளாகப் பயன்படும் கோறா, சரிகை, நூல் மற்றும் சாய பொருட்களுக்கு தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுவதோடு, விற்பனையின் போது துணிகளுக்கு தனியாக 5ரூ வீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதனால் துணிகளின் விலை 10ரூ முதல் 15ரூ  வரை கூடுதலாவதால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கைத்தறி கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களில் நெய்யப்படும் துணிகளை கையால் மட்டுமே தயாரிக்கப்படும் பாரம்பரியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து, ஜிஎஸ்டி-யிலிருந்து முழு விலக்கு பெற்றுத் தர மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.


தீர்மானம் : 33

கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு

மானியத் தொகையை உடனடியாக வழங்குக!

       தலைவர் கலைஞர் ஆட்சியில், 1996 முதல் 2001 வரையிலும், பின்னர் 2006 முதல் 2011 வரையிலான காலங்களில், தமிழகம் முழுவதுமுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியத் தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டு நெசவாளர் சங்கங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய ஆட்சியில் மானியத் தொகைகள் அறிவிக்கப்பட்டாலும் அவை ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அறிவிக்கப்பட்ட மானியத் தொகை, சங்கங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமலும், நெசவாளர்களுக்குக் கூலியை முறையாக வழங்க இயலாமலும், நெசவாளர்கள் சேமநல நிதியைக் கூட எடுத்து நிர்வாகச் செலவுகளைச் செய்யவேண்டிய  இக்கட்டான நிலையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெருத்த நட்டத்தைச் சந்தித்து மூடப்படுகின்ற சங்கடத்தில் உள்ளன. ஆகவே நிலுவையிலுள்ள மானியத் தொகையை சங்கங்களுக்கு உடனடியாகக் வழங்குவதுடன், இனி மானியத் தொகையைத் தாமதிக்காமல் உடனுக்குடன் வழங்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள காசுக்கடன் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சங்கங்களை நடத்த முடியாத நிலைமைகள் உள்ளன. கைத்தறி கூட்டுறவு நெசவாளர் நலன் கருதி ஏற்கனவே விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது போல, காசுக்கடன் தொகைகளை முழுவதுமாகத் தள்ளுபடி செய்து நெசவாளர்களைக் காப்பாற்ற மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 34

நெசவாளர்களுக்கான வீட்டுப் பத்திரத்தை உடனே வழங்குக!

       கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் 1996 முதல் 2001 வரையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சென்னிமலையில் ஒரே இடத்தில் தறியுடன் கூடிய வீடு கட்டும் திட்டம் மத்திய அரசின் ஹட்கோ மூலம் 1010 குடும்பங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் வீடு பெற்றவர்கள், அதன் பின் வந்த அ.தி.மு.க ஆட்சியின் அவலங்களால் பாதிக்கப்பட்டு, வீட்டுக்கடனைத் திரும்பச் செலுத்த இயலாத நிலையால் அல்லல்பட்டனர்.  2006-ல் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் அரசே ஏற்று வீட்டுக்கடன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் பலமுறை முயற்சி செய்தும் அந்த வீடுகளுக்கான பத்திரங்களைக்கூட மீட்டு பதிவு செய்ய முடியாமல் உள்ளனர். எனவே, காலனி நெசவாளர்கள் 1,010 குடும்பங்களின் வீட்டுப் பத்திரங்களை உடனடியாக வழங்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 35

கைத்தறி நெசவாளர் கூலி உயர்வு

       கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆண்டு தோறும், கூலி உயர்வு அந்தந்த ஆண்டில் ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வந்தது, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கூலி உயர்வு நிர்ணயத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கத் தக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேலும், தலைவர் கலைஞர் அவர்களால், கடந்த கழக ஆட்சியில் ICICI லம்பார்டு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்து நெசவாளர்களுக்கும் மிக எளிதில் மருத்துவ உதவி கிடைக்கப் பெற்றது நெசவாளர்கள் வாழ்க்கையில் பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது இந்தத் திட்டம் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் என்று அறிவிக்கப்பட்டு, எந்த மருத்துவமனையிலும் மருத்துவ உதவி பெற முடியாத நிலை உள்ளது. எனவே, மீண்டும் நெசவாளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, கூட்டுறவு சங்கம் மூலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உரிய வழிமுறைகளை தாமதமின்றி ஏற்படுத்திட வேண்டுமென இம்மாநாடு மாநில அரசை வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 36

பிடித்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டியை திரும்ப வழங்குக!

       உலகப் புகழ்பெற்ற திருப்பூர் பனியன் தொழில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு உற்பத்தியில் தொடங்கி, 1980-ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு பனியன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு உள்நாட்டு பனியன் உற்பத்தி மற்றும் வெளிநாட்டுக்கான பனியன் ஏற்றுமதியின் மூலம் ஏறத்தாழ 45 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏறத்தாழ அன்னிய செலாவணியும் கிடைக்கிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக் கூடிய தொழிலாகும் இது.

       விவசாயத்திற்கு அடுத்த படியான மிகப் பெரிய தொழிலான ஜவுளி மற்றும் பனியன் தொழில் மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் சீரழிந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி இத்தொழிலுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதுமட்டுமன்றி, ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டி வரி மூலம் அரசு வசூல் செய்யும் தொகை திரும்ப அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தும், அத்தொகையானது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் ரூ.550 கோடி அளவு திரும்ப வழங்கப்படாமல் இருப்பதனால், பனியன் தொழில் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பிடித்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி தொகையினை பனியன் உற்பத்தியாளர்களுக்கு திரும்ப வழங்காத மத்திய அரசையும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத மாநில அரசையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

       இந்திய நாட்டிற்கான அந்தியச் செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூர் ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கோடிக்கும் மேலாக ஏற்றுமதி செய்தும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியும் வருகிறது. அப்படிப்பட்ட திருப்பூரின் ஏற்றுமதித் தொழிலை முடக்கும் விதமாக, மத்திய அரசு வழங்கிய நடைமுறையில் இருந்த 7 சதவீதம் ஊக்கத் தொகையை, பா.ஜ.க அரசு நீக்கியிருக்கிறது. அந்த ஊக்கத் தொகை திரும்பவும் அளிக்கப்பட வேண்டும். திருப்பூரில் இயங்கி வரும் தொழிலை, பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு இடம் பெயரச் செய்திடும் வகையில், அந்த மாநிலங்களில் இலவசக் கட்டமைப்புகளை வழங்குவற்கும் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கவும் ஏற்பாடு செய்வதாக சம்பந்தப்பட்ட அரசின் செயலாளர்கள் மூலம் தொழில் அதிபர்களிடமும், தொழில் முனைவோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆளும் பாஜக அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் விலைகளில் சலுகையும், அதற்கு விதிக்கப்படும் எக்சைஸ் வரிகளும் திரும்பக் கிடைக்காமல் நிதி முடக்கத்தில் திருப்பூர் தொழில் நிறுவனங்கள் போராடி வருவதிலிருந்து அவற்றை மீட்டுக் காப்பாற்றவும் இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் : 37

திருப்பூரில் புதிதாக பின்னலாடை வளர்ச்சி வாரியம்

அமைக்க வேண்டும்.

       இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 50 சதவிகிதம் திருப்பூரில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பின்னலாடைத் தொழில் மேலும் வளர்ச்சியடையும் வகையிலும், தொழில் துறையினர் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், வளரும் தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கு உதவிடவும், திருப்பூரில் தனி பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைப்பதோடு, திருப்பூரில் நிரந்தர பனியன் கண்காட்சி மற்றும் வணிக வளாகத்தை ஏற்படுத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் : 38

பச்சைத் தேயிலைக்கு உரிய விலை

       நீலகிரியில் சுமார் 65,000 த்திற்கும் மேற்பட்ட சிறு - குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை தேயிலை விவசாயத்தையே நம்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தேயிலை விற்பனையில் சரிவு ஏற்பட்டு பச்சைத் தேயிலையின் விலை மிகவும் குறைந்துவிட்டது.

       கடந்த காலங்களில் பச்சைத் தேயிலைக்கு விலைக் குறைவு ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு மத்திய அரசிடமிருந்து இரண்டு ரூபாய் மானியமாக தலைவர் கலைஞர் அவர்களது பெருமுயற்சியால் விவசாயிகளுக்கு பெற்றுத்தரப்பட்டது. மேலும் தேயிலைத் தொழில் வளர்ச்சி அடைய, பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போதைய அதிமுக ஆட்சியில், தேயிலை விவசாயிகள் பலகட்டங்களாகப் போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதுடன், மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு விவசாயிகளின் நிலை குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் எந்தத் தகவலும் கூடத் தருவதில்லை.

       தற்போதுள்ள மத்திய அரசு, நீலகிரி தேயிலை விவசாயிகள் நலன் கருதி தேயிலை விலை வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைத் தேவைகளையும் நிறைவு செய்வதோடு, உரிய விலை கிடைக்கும் வரை ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ஐந்து ரூபாய் மானியமாக வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 39

நீலகிரி - கூடலூர் பிரிவு - 17 நிலப் பிரச்சினை

       கூடலூரில், பிரிவு 17 நிலப்பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. நிலம்பூர் ஜமீன் நிலங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் கடந்த 10.09.2010-ல் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கே இந்த நிலப்பிரச்சினையில் முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என தீர்ப்பளித்துள்ளது.

       இருப்பினும், பெரிய தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் மீண்டும், மீண்டும் தனித் தனி வழக்குகளைப் பதிந்துள்ளனர். ஆகவே தோட்ட நிறுவனங்கள் பதிந்துள்ள வழக்குகள் தவிர, சிறு - குறு விவசாயிகள் மற்றும குடியிருப்பவர்களுக்கு அவரவர் கைவசமுள்ள நிலங்களை அவர்களுக்கே உரிமை வழங்குவது குறித்து தனி கவனம் செலுத்தாமல், தற்போதைய அரசு மக்களுக்கு இடையூறான நிகழ்வுகளை வனத்துறை மூலம் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மின் இணைப்பு வழங்குவதை நிறுத்தி வைப்பது, உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசு நிதி ஒதுக்கினாலும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தடை விதிப்பது போன்ற காரியங்களால் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் தி.மு.க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

       தற்போது தங்களின் உரிமைக்காகப் போராடும் மக்களின் நலன் காக்கும் வகையில், அரசே முடிவெடுத்து பெரிய தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் மட்டுமன்றி சாதாரண விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், உரிய உரிமை வழங்கிப் பாதுகாத்திட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் : 40

தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம்

       நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களின் நலனுக்காக 1969-ம் ஆண்டு கழக அரசால், தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் துவங்கப்பட்டது. இதில் சுமார் ஏழாயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிகத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களது வாழ்வில், தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது மட்டுமே உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கின்றன. தற்போது அதிமுக ஆட்சியில் இவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

அரசு தேயிலை தோட்டக் கழகத்தையே மூடிவிடும் சூழலை அ.தி.மு.க அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக சுமார் 300 ஹெக்டேர் நிலப்பரப்பை, வனத்துறையிடம் ஒப்படைக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தேயிலை உற்பத்தியைப் பெருக்குவதற்கும், அதேபோல் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளின் தரத்தை உயர்த்தி விற்பனையை  அதிகரிக்கச் செய்யவும் எந்த முயற்சியும் எடுக்காமல், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பணத்தையும் தராமல், தனியார் தோட்ட நிறுவனங்கள் போல் சம்பளமும் உயர்த்தி வழங்காமல் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

       ஆகவே, தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக பேரறிஞர் அண்ணா அவர்களால் அறிவிக்கப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேயிலைத் தோட்ட நிறுவனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 41

“மாஸ்டர் பிளான்”  கட்டிடத் தடைச் சட்டம்

       1993ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட “மாஸ்டர் பிளான்” என்னும் கட்டிட விதிமுறைச் சட்டத்தின் காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர், நீலகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றியும், விதிமீறியும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டியதாகக் கண்டறியப்பட்டு, தற்போது நடவடிக்கை எடுக்கக் கூடிய நிலையில் உள்ளது. இதனால் சுமார் 5000 குடும்பங்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளனர்.

       தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான மனைகளை வரன்முறைப்படுத்தும் சட்டப்படி, அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த வரைமுறைப்படுத்தும் நிகழ்வின் அடிப்படையில், நீலகிரியில் இதுவரை ஒரு முறைகூட வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, ஒரே ஒருமுறை மட்டுமாவது நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை அங்கீகரித்துத் தர வேண்டுமென மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 42

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிடுக!

       பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவிப்புக்கிணங்க 23.07.1967 அன்று தமிழ்நாடு முழுவதும் “எழுச்சி நாள்” கடைபிடிக்கப்பட்டது. சேலம் உருக்காலைத் திட்டம், சேதுக் கால்வாய்த் திட்டம், தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்கள் குரல் கொடுத்து வந்தார்கள். 23.03.1970 அன்று இந்தியப் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அம்மையார் தலைமையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், சேலம் உருக்காலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். சேலம் உருக்காலையின் உற்பத்திப் பொருளான “சேலம் ஸ்டெயின்லஸ்” சர்வதேச சந்தையில் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. சுமார் 37 நாடுகளுக்கு சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட தரம் மிகுந்த ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி மையம், பாபா அணு உலை மங்கள்யான் செயற்கைக்கோள் ஆகியவற்றில் சேலம் உருக்காலை ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1999 முதல் 2004 வரை மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா அரசு சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டது. அப்போதும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள் இணைந்து தனியார் மயமாக்கலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனியார்மயமாக்கல் கைவிடப்பட்டு பொதுத் துறை நிறுவனமாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. சேலம் உருக்காலை தற்போது லாபத்தில் இயங்கி வருகிற சூழ்நிலையில், எப்படியாவது தனியாருக்குத் தாரை வார்த்து விடலாம் என்கிற முயற்சியில் பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இலாபகரமாக இயங்கி வருகிற சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்; தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் : 43

சேலம் உருக்காலை உபரி நிலம்

       சேலம் உருக்காலை உருவான போது அரசு உருக்காலை அமைவதற்காகவே சுமார் மூவாயிரம் குடுப்பங்களைச் சார்ந்த விவசாயிகள்  தங்கள் நான்காயிரம் ஏக்கர் நிலங்களை தாரை வார்த்தார்கள். அப்படி நிலம் வழங்கிய குடும்பங்களைச் சார்ந்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு உருக்காலையில் உரிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தவிர உருக்காலைப் பயன்பாட்டிற்குப் போக எஞ்சியிருக்கும் நிலங்களை சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 44

சேலம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட வேண்டும்.

       சேலம் மாநகராட்சி ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் கழக ஆட்சியின் போது தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்காக, 165 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 14.09.2007 அன்று தலைவர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ.9.44 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு இத்திட்டத்தை ஏறக்குறைய கிடப்பில் போட்டுவிட்டது. இனியும் தாமதமின்றி உடனடியாக சேலம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைத்திடவும், மத்திய, மாநில அரசுகள் நேரடியாகத் தலையிட்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு அதிக அளவில் முதலீடுகள் செய்து தொழில் தொடங்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமாக தொழில் வளம் பெருக்கி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 45

மலைவாழ் மக்களுக்கு உரிய நேரத்தில் சாதிச் சான்றிதழ்!

       தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு குறித்த காலத்தில் சாதிச் சான்றிதழ் வழங்காத நிலை உள்ளது. அதன் காரணமாக சொல்லவியலாத துன்பங்களுக்கு மாணவச் செல்வங்கள் ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறை, ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பர்கூர் மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி பெற இயலாமல் அவதிப்படுகின்றனர். இந்த நிலை மாற, மலைவாழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் அவ்வினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு தாமதமில்லாமல் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 46

வனவிலங்குகளிடமிருந்து மனித உயிர்களைக்

காப்பாற்றி,  இழப்பீடு வழங்குக!

        ஈரோடு மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதி உள்ளதால், இப்பகுதிகளில் வனவிலங்குகள் அடிக்கடி ஊர்களுக்குள் நுழைந்து, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவதோடு விவசாய நிலங்களுக்கும் பெரும் சேதம் ஏற்படுத்துகின்றன.  வனத்தையும் வன விலங்குகளையும் அழிவிலிருந்து காப்பாற்றும் அதேவேளையில், மக்களையும் அவர்தம் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் இன்றைய அரசு இப்பிரச்சினையைத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. எனவே, நாள்தோறும் வளர்ந்து வரும் இப்பிரச்சினையைத் தீர்க்க, தக்க நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து, திட்டமிட்டு செயல்படுத்த வேண்டுமென்றும், அதுவரை பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக உதவியும், தக்க இழப்பீடும் வழங்க வேண்டுமென்றும் மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 47

லாரி உதிரிப் பாக தொழிற்பூங்கா

       அகில இந்திய அளவில் லாரி போக்குவரத்து மற்றும் லாரி கட்டுமானத் தொழிலில் நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகள் முன்னணி வகிக்கின்றன. இவை அனைத்திற்கும் தேவையான உதிரி பாகங்கள், வெளி மாநிலங்களிலிருந்தே வாங்கப்படுகின்றன. அந்தப் பொருட்களை இப்பகுதியிலேயே தயாரிக்கும் வகையில் தொழிற்பூங்கா ஏற்படுத்தினால் இத்தொழில்  சார்ந்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள, படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும்; மேலும் இங்கு உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வெளி  மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் அரசுக்கும் வருவாய் பெருக வாய்ப்பேற்படும் என்பதால் இத்திட்டத்தை உடனே நிறைவேற்ற மாநில அரசு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 48

கோழிப்பண்ணை முட்டை ஒப்பந்தம்

       தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்ய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மாவட்டந்தோறும் ஒப்பந்தப்புள்ளி கோரும் முறை இருந்தது. அதனால், அந்தந்தப் பகுதியிலுள்ள கோழிப் பண்ணையாளர்கள் அதில் கலந்து கொண்டு பயனடைய வாய்ப்பிருந்தது. ஆனால் தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் மாநிலம் முழுவதற்கும் ஒரே ஒப்பந்தம் என்ற அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி கோருவதால் சிறுபண்ணையாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்பின்றி, ஒரே பெருமுதலாளியின் கைக்கு ஒப்பந்தம் செல்லும் நிலைமை உள்ளது. எனவே, இதை மாற்றி முன்பு நடைமுறையில் இருந்த மாவட்ட ஒப்பந்த முறையையே அறிமுகப்படுத்தி, கோழிப் பண்ணையாளர்களின் வாழ்க்கைக்கு உதவிட வேண்டுமென்று மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அழுகும் பொருளான முட்டைகளைச் சேமித்து வைக்க போதிய குளிர்பதனக் கிடங்குகள் அமைத்துத் தர வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 49

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியக் கோரிக்கைகள்

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திட தலைவர் கலைஞர் அவர்களால் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் முடங்கிப் போகின்ற அளவிற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும், மாவட்டந்தோறும் உறுப்பினர்களையும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமனம் செய்து, காலாண்டு குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தி நலவாரியங்கள் உயிர்ப்புடன் செயல்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும்; நலவாரிய நடவடிக்கைகளில், நலவாரிய உறுப்பினர்களே நேரில் அணுகி தங்களது கேட்பு மனுக்களை கொடுக்க வேண்டும் என்ற முறையை உடனடியாகக் கைவிட்டு, முன்பிருந்தது போல, அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மூலம் பயன்பெறும் வகையிலான நடவடிக்கைகளை ஏற்படுத்திட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் நலனுக்கு, ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேலான மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு உள்ளூர்த் திட்ட குழுமங்கள் 3 சதவீதம் வசூலித்து கட்டுமான நலவாரியக் கணக்கில் செலுத்திட அரசு ஆணை வெளியிட  வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அமைப்புசாரா கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரசவ கால உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளும் காலதாமதமின்றி உடனே வழங்கிட வேண்டுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அமைப்புசாரா சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு, அரசு நிறுவனமான சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடைபிடிக்கப்படுவது போல, நிர்வாகத்தின் பங்கோடு தொழிலாளர்களின் பங்களிப்பு 12 சதவீதம் பெற்று, பி.எப். செலுத்தி,  பி.எப். சட்டப்படி அனைத்து சலுகைகளையும் வழங்கிட அரசாணை வெளியிட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 என்பதை உறுதிப்படுத்திடவும், 60 வயதிற்குப் பிறகு குறைந்த பட்சமாக மாத ஓய்வூதியமாக ரூ.3,000 என்பதைக் கட்டாயமாக்கிச் சட்டம் இயற்ற தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், விபத்து - மரண உதவித்தொகை, இயற்கை மரணம் ஆகியவைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை வழங்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது, மேலும் சிறு குறைகளுக்குக் கூட கேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, நலவாரியத்திற்கு தக்க நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து கேட்பு மனுக்களுக்கும் நிலுவை இன்றி உதவித் தொகைகள் வழங்க வேண்டுமாறு தமிழக அரசையும் கட்டுமான நலவாரியத்தையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
விபத்து மரணம் ஏற்படும் கட்டுமானத் தொழிலாளரின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படுவதைப் போல அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு விபத்து, மரணம் ஏற்பட்டால் தற்போது வழங்கப்படும் உதவித் தொகை 1 லட்சம் ரூபாய் என்பதை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தினால் பலவகையில் ஆட்டோ - பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் மெக்கானிக்குகள் பாதிக்கப்படுகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்குத் துணை போகும் வகையில் அமைந்துள்ள இந்த சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 50

அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களின்

12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுக!

 

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, SEWA, LPF மற்றும் UTUC ஆகிய மத்திய தொழிற் சங்கங்கள் பின்வரும் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

1)      விலைவாசியைக் கட்டுப்படுத்து!

2) புதிய வேலைவாய்ப்பை உருவாக்குக! இருக்கும் வேலைவாய்ப்பைப் பறிக்காதீர்!

3)      அந்நிய நேரடி முதலீட்டைத் தவிர்த்திடுக!

4)      பொதுத்துறைகளை சீரழிக்காதீர்!

5)      அனைவருக்கும் ஓய்வூதியம் மாதம் ரூபாய் 3000 வழங்கிடுக. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக!

6)      நிரந்தர பணிகளில் உள்ள ஒப்பந்த முறையை கையாள்வதும், பணிகளை வெளியில் விடுவதும் (Out Sourcing) ஆகியவற்றைத் தவிர்த்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுக!

7)      குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்கிடுக!

8)      அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொதுநிதியம் அமைத்து அதற்கு வேண்டிய நிதி முழுவதும் அரசே வழங்க வேண்டும். அனைவருக்கும் EPF, ESI வசதிகள் செய்து தர வேண்டும்.

9)      தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, தொழிற்சங்க கூட்டுபேர உறவுகள் பற்றிய ILO 87 மற்றும் 98 தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும்.

10)   தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமைப்படுத்துவதாகக் கூறி முதலாளி களுக்கு ஆதரவாக சட்டத்திருத்தங்களை செய்வதைத் தவிர்த்திடுக!

11)   மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்து மாநில உரிமைகளைப் பறித்து பொது போக்குவரத்தை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு நிர்வாகத்தை தாரை வார்ப்பதைத் தவிர்த்திடுக!

12)   போனஸ் பிராவிடண்ட் நிதி ஆகியவற்றுக்கான அனைத்து உச்சவரம்புகளையும் நீக்கிட வேண்டும். கிராஜுவிட்டி தொகையை உயர்த்திட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்திட மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு அருண்ஜேட்லி அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, குழு செயல்படாமல் இருந்து வருவதை இம்மாநாடு கண்டிப்பதோடு, உடனடியாக மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சார்ந்த செய்திகள்